கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
துறைமுகங்களின் ஏற்றுமதி-இறக்குமதி சரக்கு போக்குவரத்து திறன் மற்றும் வருவாய் அதிகரிப்பு
Posted On:
30 NOV 2021 3:36PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
2013-14 நிதியாண்டு வரை நாட்டில் 12 பெரிய துறைமுகங்கள் மற்றும் 200 பெரியவை அல்லாத துறைமுகங்கள் இருந்தன. பெரிய துறைமுகங்களின் வருடாந்திர சரக்கு கையாளும் திறன் 800.52 மில்லியன் டன்னாகவும், பெரியவை அல்லாத துறைமுகங்களின் வருடாந்திர சரக்கு கையாளும் திறன் 599.47 மில்லியன் டன்னாகவும் இருந்தது. 2013-14-ல் அனைத்து இந்திய துறைமுகங்களின் மொத்த கொள்ளளவு 1399.99 மில்லியன் டன் ஆகும்.
2020-21-ம் ஆண்டில் பெரிய துறைமுகங்களில் சரக்கு கையாளும் திறன் 1560.61 மில்லியன் டன் ஆகவும், பெரியவை அல்லாத துறைமுகங்களின் திறன் 1002.24 மில்லியன் டன் ஆகவும் இருந்தது. மார்ச் 31, 2021 அன்று அனைத்து இந்திய துறைமுகங்களின் மொத்த கொள்ளளவு 2562.85 மில்லியன் டன் ஆகும்.
2020-21 ஆம் ஆண்டில் மத்திய அரசின் கீழ் உள்ள பெரிய துறைமுகங்கள் ஈட்டிய மொத்த இயக்க வருமானம் ரூ 14688.80 கோடி. 2013-14-ல் இது ரூ 9162.80 கோடி ஆகும். பெரிய துறைமுகங்களின் மொத்த வருமானம் 2020-21-ல் ரூ 16419.27 கோடி, இது 2013-14-ல் ரூ 11171.97 கோடி.... பவனபாடு, மச்சிலிப்பட்டினம் மற்றும் ராமையப்பட்டினம் ஆகியவற்றை நில உரிமையாளர் அடிப்படையில் பெரியவை அல்லாத துறைமுகமாக ஆந்திரப் பிரதேச அரசு உருவாக்கி வருகிறது. ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள துக்கிராஜுபட்டினம் துறைமுகத்தின் வளர்ச்சிக்குப் பதிலாக ராமையப்பட்டினம் துறைமுகத்தை மேம்படுத்த ஆந்திரப் பிரதேச அரசு நிதியுதவி கோரியது.
ராமையப்பட்டினத்தின் துறைமுக எல்லைகளை பிப்ரவரி 20.2020 அன்று பெரியவை அல்லாத துறைமுகமாக மாநில அரசு அறிவித்தது. இது அந்தந்த மாநில கடல்சார் வாரியங்கள்/மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. பிராந்திய இணைப்புத் திட்டம்-உடானின் கீழ், சபர்மதி ஆறு மற்றும் ஒற்றுமை சிலைக்கு இடையேயான கடல் விமான சேவை அக்டோபர் 31, 2020 அன்று தொடங்கியது. பின்னர், செயல்பாட்டுக் காரணங்களுக்காக விமான இயக்க நிறுவனங்களால் ஏப்ரல் 11, 2021 அன்று இது நிறுத்தப்பட்டது.
கடல் விமான செயல்பாடுகளை சாத்தியமானவையாக மாற்றுவதற்கு தொடர்புடைய பங்குதாரர்களுடன் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. கடல் விமான சேவைகளை மேம்படுத்துவதற்காக துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
உடான் திட்டத்தின் கீழ் குஜராத், அசாம், தெலங்கானா, ஆந்திரா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்களில் நீர் விமான நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776428
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776427
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776425
**********
(Release ID: 1776595)