பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2021 தொடங்குவதையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கை
Posted On:
29 NOV 2021 11:47AM by PIB Chennai
நமஸ்காரம் நண்பர்களே,
நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. விடுதலைப் பெருவிழாவை நாடு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதுமுள்ள சாமான்ய மக்கள், விடுதலைப் பெருவிழாவின்போது, பொதுநலன் மற்றும் தேசநலன் கருதி, சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றும் விதமாக, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இது, இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறி ஆகும்.
அண்மையில், அரசியல் சாசன தினத்தன்று, அரசியல் சாசனத்தின் உட்கருத்தை புதிய உறுதியுடன் நிறைவேற்ற ஒட்டுமொத்த நாடும் தீர்மானித்துள்ளது. அந்த வகையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் மற்றும் விடுதலைப் பெருவிழா உணர்வுகளுக்கேற்ப, நாம் அனைவரும், இந்தக் கூட்டத்தொடர் மற்றும் நாடாளுமன்றத்தின் அடுத்தடுத்த கூட்டத்தொடர்களிலும், நாட்டு நலன் தொடர்பான அம்சங்களை விவாதித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைக் கண்டறிய வேண்டுமென நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் விரும்புகின்றனர். இந்தக் கூட்டத் தொடரில், நல்ல கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதுடன், தொலைநோக்கான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆக்கப்பூர்வ விவாதங்கள் இடம்பெற வேண்டும். நாடாளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றியும், நாடாளுமன்றத்தை வலுக்கட்டாயமாக யார் முடக்குகிறார்கள் என்பதைவிட, அவையின் முக்கியப் பங்களிப்பு பற்றியும் மதிப்பிடப்பட வேண்டும். இது மட்டுமே அளவுகோல் அல்ல. நாடாளுமன்றம் எத்தனை மணி நேரம் செயல்படுகிறது, எந்தளவிற்கு ஆக்கப்பூர்வமான அம்சங்கள் நடைபெறுகிறது என்பது தான் அளவுகோலாக இருக்க வேண்டும். அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும், திறந்த மனதுடன் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க அரசு தயாராக உள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுவதையும், அவையில் அமைதி நிலவ வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்.
அரசின் கொள்கைகளுக்கு எதிரான குரல்கள் வலிமையாக இருந்தாலும், நாடாளுமன்றம் மற்றும் அவைத்தலைவரின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், நமது நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். கடந்த கூட்டத்தொடருக்குப் பிறகு, நாட்டில் 100 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதுடன், 150 கோடி டோஸ் என்ற எண்ணிக்கையை நோக்கி வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். புதிய வகை உருமாறிய தொற்று குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பத்திரிகையாளர்களாகிய நீங்களும், விழிப்புடன் இருக்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன், ஏனெனில், இந்த நெருக்கடியான நேரத்தில் அனைவரது ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், உணவு தானியங்களை இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம், நாட்டிலுள்ள 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், கொரோனா காலகட்டத்திலும் பாதிக்கப்படாமல் இருந்தனர். தற்போது, இத்திட்டம் மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம், நாட்டு மக்கள் 80 கோடிக்கும் மேற்பட்டோரின் கவலைகளைத் தீர்ப்பதோடு, ஏழைகளின் வீடுகளில் அடுப்பெரியவும் வழிவகுத்துள்ளது. நாட்டு நலன்கருதி இந்தக் கூட்டத்தொடரில், அனைவரும் ஒருங்கிணைந்து விரைவான முடிவுகளை மேற்கொள்வதுடன், சாமான்ய மனிதனின் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும் நான் நம்புகிறேன். இதுவே எனது எதிர்பார்ப்பு. மிக்க நன்றி.
பொறுப்பு துறப்பு : இது, பிரதமர் உரையின் தோராய மொழிபெயர்ப்பு. மூல உரை இந்தியில் உள்ளது.
*****
(Release ID: 1776135)
Visitor Counter : 442
Read this release in:
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada