நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமுதாய சமையலறை திட்டத்தை வகுப்பதற்காக மாநிலங்களுடன் இணைந்து உணவு செயலாளர்கள் குழுவை மத்திய அரசு அமைப்பு, புதுதில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அமைச்சர் பங்கேற்பு

Posted On: 25 NOV 2021 3:46PM by PIB Chennai

சமுதாய சமையலறை திட்டத்திற்கான செயல்முறையை ஆலோசித்து உருவாக்குதற்காக மாநிலங்களுடன் இணைந்து உணவு செயலாளர்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

 

இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளி, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், எளிமையான, வெளிப்படையான மற்றும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சமுதாய சமையலறைகள் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.

 

"நாட்டின் ஏழைகள் மீது நாம் அனுதாபம் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக வெற்றிகரமான மற்றும் வெளிப்படையான உணவுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கூட்டு உறுதியை வெளிப்படுத்த வேண்டும்"  என்று அவர் கூறினார்.

 

அனைத்திந்திய உணவு அமைச்சர்கள் கூட்டத்தில் இன்று உரையாற்றிய திரு கோயல், கொவிட் காலத்தில் செயல்படுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய உணவுத் திட்டமாக பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் விளங்குகிறது என்று கூறினார்.

 

நாட்டில் யாருக்கும் உணவு தானியங்கள் கிடைக்காமல் இல்லை என்று கூறிய அவர், "இந்தப் புகழ் இங்கு இருக்கும் அனைவரையும், குறிப்பாக நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களையும் சேரும்,” என்றார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பயனாளிகளுக்குத் தரமான உணவு தானியங்கள் சென்றடைய வேண்டும் என்பதே நமது தீர்மானமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

 

உணவு தானிய விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி தெரிவித்த அமைச்சர், கொவிட்-19 உச்சக்கட்டத்தில் இருந்த போதும் உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருந்தது மிகப்பெரிய சாதனையாகும் என்றார். பெருந்தொற்றின் போது பட்டினியால் இறப்பு எதுவும் ஏற்படாதது கூட்டு முயற்சியின் விளைவாகும்  என்றும்

அவர் கூறினார்.

 

நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சௌபே மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் திரு சுதன்ஷு பாண்டே ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

தமிழக உணவு அமைச்சர் திரு ஆர் சக்கரபாணி மற்றும் புதுச்சேரி உணவு அமைச்சர் திரு ஏ கே சாய் ஜெ சரவணகுமார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உணவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775009

****


(Release ID: 1775124) Visitor Counter : 202


Read this release in: English , Marathi , Hindi , Malayalam