பிரதமர் அலுவலகம்

தடையற்ற கடன் பெறுதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஒருமைப்பாட்டை உருவாக்குதலகுறித்த மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

Posted On: 18 NOV 2021 9:30PM by PIB Chennai

நாட்டின் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களே, நிதித்துறை இணையமைச்சர்கள் திரு பங்கஜ் சவுத்ரி அவர்களே, டாக்டர் பகவத் கராத் அவர்களே, ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் அவர்களே, வங்கித்துறையின் நிபுணர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பிரதிநிதிகளே அனைவருக்கும் வணக்கம்.

இங்கு ஆற்றப்பட்ட உரைகளைக் கேட்டதில், அனைவருக்கும் நம்பிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. கடந்த 6-7 ஆண்டுகளில், வங்கித்துறையில் அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் காரணமாக தற்போது வங்கிகள் வலுவுள்ளதாக மாறியுள்ளன. வங்கிகளின் நிதி நிலை தற்போது ஆரோக்கியமாக உள்ளது. 2014 முதல் எதிர்கொண்ட நெருக்கடிகள் மற்றும் சவால்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

நண்பர்களே, வங்கித்துறையில் அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. வாராக்கடன் பிரச்சினைக்கு நாம் தீர்வு கண்டுள்ளோம். வங்கிகளுக்கு மறுமுதலீடு செய்து அவற்றை வலுவானதாக்கியுள்ளோம்.  திவால் சட்டத்தை இயற்றி, பல்வேறு சட்டங்களையும் மாற்றியமைத்து, கடன் வசூல் தீர்ப்பாயங்களுக்கு அதிகாரமளித்துள்ளோம். கொரோனா பெருந்தொற்று காலத்தில், நாட்டில் வலியுறுத்தப்பட்ட சொத்து மேலாண்மைக்கான பிரத்யேக முறையையும் ஏற்படுத்தியுள்ளோம்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளித்து, இந்தியாவை தற்சார்பு அடைந்த நாடாக மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கத் தேவையான வலிமையுடன் இந்திய வங்கிகள் மாற்றப்பட்டுள்ளன. இது இந்திய வங்கித்துறையில் பெரிய மைல்கல் என நான் கருதுகிறேன். சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் வங்கிகளுக்கு வலுவான முதலீட்டுக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. வங்கிகள் தற்போது போதிய பணப்புழக்கம் வைத்திருப்பதால், வாராக்கடன்களைப் பட்டியலிடுவதில் பின்னடைவு ஏதும் இப்போது இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கிகளின் வாராக்கடன்கள் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளன. சொத்து உருவாக்குவோர் மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோருக்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். நாட்டின் சொத்துப்பட்டியலுடன், இருப்பு நிலையை மேம்படுத்துவதற்கு வங்கிகள் ஆக்கபூர்வமாகப் பணியிற்றுவது அவசியத் தேவையாகும்.

வங்கிகள் வாடிக்கையாளருகளுக்கு ஆக்கபூர்வமாக சேவையாற்ற வேண்டும். வாடிக்கையாளர்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் தேவையை அறிந்து, அதற்கேற்ற தீர்வுகளை வங்கிகள் வழங்குவது அவசியமாகும். உதாரணமாக, உத்தரப்பிரதேசத்தின் புந்தேல்காண்ட் மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த வங்கி கிளைகளின் கூட்டத்தை நீங்கள் கூட்டியுள்ளீர்களா? இந்த வழித்தடங்களுக்கு வங்கிகள் எவ்வாறு தீவிரமாக பங்காற்ற முடியும் என தெரிந்து கொண்டீர்களா? அங்கு உருவாகும் வாய்ப்புகள் என்ன, எந்த நிறுவனங்கள் வரப்போகின்றன, யார் முதலீடு செய்யப்போகின்றனர், இதில் வங்கிகளின் அணுகுமுறை என்ன, யார் சிறந்த சேவையை வழங்குவார்கள் போன்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டால்தான் அரசின் தொலைநோக்கு சாத்தியமாகும்.

வங்கிகள் வாடிக்கையாளர்களை விண்ணப்பதாரர்களாகவும், தங்களை அனுமதிப்பவர்களாகவும், தங்களை கொடுப்பவர்களாகவும், வாடிக்கையாளரை பெறுபவராகவும் கருதாமல், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த இடத்தில் ஜன்தன் திட்டத்தில் வங்கிகள் காட்டிய உற்சாகம் பாராட்டத்தக்கது.

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாக வங்கிகள் உணர்வதோடு, வளர்ச்சி சரித்திரத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்க வேண்டும். உற்பத்தியாளர்களுக்கு, அவர்களது உற்பத்திக்கேற்ற ஊக்கத்தொகை – PLI வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகரித்து, தங்களை உலகளாவிய நிறுவனங்களாக மாற்றிக்கொள்ளும் திறனை உருவாக்க ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தங்களது ஆதரவு மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, திட்டங்களை லாபகரமானவையாக மாற்றுவதில் வங்கிகள் பெரும் பங்கு வகிக்க வேண்டும்.

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரும் மாற்றங்கள் காரணமாகவும், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் காரணமாகவும், நாட்டில் பெரிய அளவிலான தரவு தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வங்கித் துறை இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், ஸ்வமித்வா மற்றும் ஸ்வநிதி போன்ற முன்னோடித் திட்டங்கள் வழங்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இதுபோன்ற சீர்திருத்தங்களில் பங்கேற்று முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.

உள்ளார்ந்த நிதிச் சேவைக்காக நாடு கடினமாக உழைத்துவரும் வேளையில், மக்களின் உற்பத்தித் திறனை வெளிக்கொணர வேண்டியது அவசியம்.மாநிலங்களில் அதிகளவில் ஜன் தன் கணக்குகளைத் தொடங்கியதால், குற்றச் செயல்கள் பெருமளவு குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதேபோன்று, பெரு நிறுவனங்களும், புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகளவில் உருவாகி வருகின்றன.

நண்பர்களே, தேசத்தின் இலக்குகள் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், வங்கிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இணையதளம் அடிப்படையில், அமைச்சகங்கள் மற்றும் வங்கிகளை ஒருங்கிணைக்க, நிதியுதவித் திட்டங்களைப் பின்தொடர்வதற்கான உத்தேச முயற்சிகள் பாராட்டத்தக்கவை. சுதந்திர தினபெருவிழா காலத்தில்‘, இந்திய வங்கித் துறை பெரிய அளவிலான சிந்தனைகள் மற்றும் புதுமையான அணுகுமுறைகளைப் பின்பற்றவேண்டும். இந்த அணுகுமுறையுடனும், புதிய உறுதிப்பாட்டுடனும், செயல்பட்டால் மிகப்பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நான் அடிக்கடி வங்கியாளர்களிடம் கூறுவது, நான் உங்களுடன் இருக்கிறேன். நாட்டின் நலனுக்கான எந்தப்பணியிலும் நான் உங்களோடு இருப்பேன். சில சமயங்களில், நாட்டு நலனுக்காக, நேர்மையுடனும், உளப்பூர்வமகவும் சில காரியங்களைச் செய்யும் போது, சில தவறுகள் ஏற்படுவதுண்டு. அதுபோன்ற நெருக்கடிகள் வருமானால், உங்களுடன், சுவர் போல நிற்பதற்கு நான் தயார். ஆனால், இப்போது, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, நமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இதுபோன்ற அருமையான களப்பணிகள் தயாராக இருக்கும்போது, விண்ணை முட்டும் வாய்ப்புகளும் ஏராளமாக உள்ள போது, வெறும் சிந்தனையிலேயே நமது காலத்தைக்கழித்தால், வருங்கால தலைமுறை நம்மை மன்னிக்காது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! நன்றி!

*****



(Release ID: 1773738) Visitor Counter : 124