மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாதில் ஆதார் சேவை மையம் ராஜீவ் சந்திரசேகர், ஜெனரல் வி கே சிங் (ஓய்வு) ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது
ஆதார் மற்றும் டிபிடி பயன்பாட்டால் ரூ.1.78 லட்சம் கோடி மக்கள் வரிப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது: ராஜீவ் சந்திரசேகர்
Posted On:
21 NOV 2021 3:43PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாதில் இன்று 5வது ஆதார் சேவை மையத்தை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெனரல் வி கே சிங் (ஓய்வு) ஆகியோர் கூட்டாக திறந்துவைத்தனர். இந்த ஆதார் சேவை மையம் நாளொன்றுக்கு ஆயிரம் பேரின் கோரிக்கைகளை கையாளும் திறன்கொண்டது. இந்த நிதியாண்டின்போது மேலும் நான்கு ஆதார் சேவை மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்த மையம் காசியாபாத் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்கு திட்டம் குறித்து பேசிய அவர், இந்தியா போன்ற வளரும் நாட்டில் மூன்று முக்கியமான பயன்கள் தொழில்நுட்பத்தால் கிடைக்கின்றன என்றார். ஒன்று, தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இரண்டு, பொருளாதார வாய்ப்புகளை விரிவாக்குகிறது. மூன்று, சில தொழில்நுட்பங்களில் உத்திகள் வகுப்பதற்கான திறன்களை உருவாக்குகிறது.
கடந்த ஆறாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு அரசு விடுவிக்கும் தொகை முழுவதும் அவர்களை சென்றடைகிறது என்று அமைச்சர் கூறினார். மத்திய அரசால் விடுவிக்கப்படும் 100 பைசாவில் 15 பைசா மட்டுமே பயனாளிகளை சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ஒருவர் 1980களில் ஒப்புக்கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கோவின் இணையதளம் காரணமாக இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பதை ஓர் உதாரணமாக அமைச்சர் எடுத்துரைத்தார். பல நாடுகள் தங்களின் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த இந்த இணையதளத்தைப் பெரிதும் நாடுவதாக அவர் கூறினார். ஆதார் மற்றும் டிபிடி பயன்பாட்டால் மக்கள் வரிப்பணத்திலிருந்து 2020 மார்ச் நிலவரப்படி ரூ.1.78 லட்சம் கோடி சேமிக்கப்பட்டிருப்பதாக ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773720
****
(Release ID: 1773731)
Visitor Counter : 333