குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

Posted On: 15 NOV 2021 7:21PM by PIB Chennai

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்து நிற்கக்கூடிய மற்றும் புதுமையான கைவினைப் பொருட்களைக் பழங்குடி சமூகங்கள் உருவாக்குகின்றன என்று அவர் கூறினார்.

பழங்குடியின மக்களின் இயற்கையான திறன்கள் மற்றும் அவர்களது தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் பிரபலப்படுத்தவும் மற்றும் அவர்களின் வருமான ஆதாரங்களை மேம்படுத்தவும் வழிவகை செய்ய வேண்டியதன் அவசியத்தை திரு நாயுடு வலியுறுத்தினார். "பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் பெண்களின் தயாரிப்புகளுக்கு போதுமான சந்தைப்படுத்தல் வழிகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

கர்நாடக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஜன்ஜாதியா கவுரவ் தின விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர், சுதந்திரப் போராட்டத்தின் போது பழங்குடியின சமூகங்களின் பங்கை எடுத்துரைத்தார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு பழங்குடி சமூகங்கள் பெரிய அளவில் பங்களித்ததாக அவர் கூறினார். "நாட்டின் பல்வேறு மூலைகளில் தோன்றிய இந்த பழங்குடியின இயக்கங்கள் கொடுங்கோல் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எழுவதற்கு பலரைத் தூண்டியது," என்று அவர் மேலும் கூறினார்.

பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை ஜன்ஜாதிய கவுரவ் தினம் என்று அறிவித்ததற்காக அரசைப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களான ராணி துர்காவதி, ராணி கெய்டின்லியு, பாபா தில்கா மாஜி, கொமரம் பீம், அல்லூரி சீதாராமராஜு மற்றும் பலரின் வீரக் கதைகளை எடுத்துரைப்பது முக்கியம் என்றார். ஒவ்வொரு ஆண்டும் ஜன்ஜாதிய கவுரவ் தின கொண்டாடுவது பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் தைரியம், அச்சமின்மை மற்றும் தியாகங்களை வரும் தலைமுறைக்கு உணர்த்தும் என்றார் அவர்.

பழங்குடியின மக்களின் 75 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை நினைவுகூரும் வகையில் நவம்பர் 15, 2021 முதல் ஒரு வார கால கொண்டாட்டங்கள் நடைபெறுவது குறித்து குடியரசு துணைத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1772076

****



(Release ID: 1772119) Visitor Counter : 470