நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

தஞ்சாவூரில் உணவுப் பாதுகாப்பு அருங்காட்சியகத்தையும், கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் மண்டல அலுவலகத்தையும் திரு.பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

Posted On: 15 NOV 2021 4:45PM by PIB Chennai

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெரு விழாவின் ஒரு பகுதியாக இந்தியாவின் முன்னேற்றத்தையும் அதன் புகழ் மிக்க வரலாற்றையும் கொண்டாடவும், நினைவுகூரவும் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உணவுப் பாதுகாப்பு அருங்காட்சியகத்தோடு புகைப்படக் கண்காட்சியையும், கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் மண்டல அலுவலகக் கட்டிடத்தையும் திங்களன்று மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளித்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், உணவுப் பாதுகாப்புக்கு வலுவான அடிப்படைக் கட்டமைப்பு உருவாக்கம் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதை நோக்கிய ஒரு நடவடிக்கையாகும் என்றார். பருத்திக்கு வர்த்தக மையமாக இருப்பதிலிருந்து உணவுப் பாதுகாப்புக்கான மையமாக ஹூப்ளி மாறியிருப்பது புதிய இந்தியாவின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

தஞ்சாவூரில் உணவுப் பாதுகாப்பு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டிருப்பதற்காக அனைவருக்கும் பாராட்டு தெரிவித்த அவர், இது இந்தியாவின் வேளாண் வளர்ச்சியை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது என்றார். இந்தியாவின் முதலாவது உணவுப் பாதுகாப்பு அருங்காட்சியகம் இது என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரமான தஞ்சாவூர் இப்போது இந்தியாவின் வேளாண் துறை வரலாற்றின் தலைமையகமாக மாறும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

உணவுப் பாதுகாப்பு பராமரிப்பு சம்பந்தப்பட்ட அனைவரின் முயற்சிகளையும் சித்தரிப்பதாக இந்த தேசிய அருங்காட்சியகம் விளங்குகிறது. “இந்த அருங்காட்சியகத்திற்குப் பயணம் செய்வதன் மூலம் இந்தியர்கள் அனைவரும் குறிப்பாக இந்திய இளைஞர்களும், சிறார்களும் சிறந்த பயனை அடைவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என அவர் கூறினார்.

“உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி உலகம் பேசிக் கொண்டிருப்பதாக அமைச்சர் திரு.கோயல் கூறினார். நமது நாட்டின் மக்களுக்கும், உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் நம்மால் உணவு தானியங்களை வழங்க முடிவதற்காக விவசாயிகளின் மற்றும் உங்கள் அனைவரின் பணிக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று திரு.கோயல் கூறினார்.

பழங் கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் உணவுப் பொருள் எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதிலிருந்து, பண்டைக் கால மனிதர்களால் எதிர்கொள்ளப்பட்ட பல்வேறு சேமிப்பு வழிமுறைகள் மற்றும் சவால்கள் வரையிலான தகவல்கள் பரிமாற்றம் மற்றும் கோட்பாடு அடிப்படையில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுக்கழகத்தின் வரலாறு, கொள்முதல், இருப்பு வைத்தல், பாதுகாத்தல், கொண்டு செல்லுதல், விநியோகம் தொடர்பான பல முக்கிய தகவல்களையும் இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது.

மெய்நிகர் வழியில் இந்திய உணவுக்கழகம் குறித்த 3டி திரைப்படம் காட்டப்படுவதோடு சிறார்களுக்கான வினாடி வினாக்களும் இடம் பெற்றுள்ளன. மற்ற சில குறிப்பிடத்தக்க ஈர்ப்பான விஷயங்களுக்கு அப்பால் ஆளுயரத்தில் பொது விநியோக கடையின் மாதிரி வடிவமும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர்கள் அஸ்வினி குமார் சவ்பே, சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோரும் பங்கேற்றனர்.

*************



(Release ID: 1772071) Visitor Counter : 397


Read this release in: English , Hindi , Marathi , Kannada