குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுமாறு ஆளுநர்களை திரு வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்

Posted On: 11 NOV 2021 6:42PM by PIB Chennai

மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுவதிலும், தேசத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்க மக்களை திரட்டுவதிலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் மாநாட்டில் உரையாற்றிய திரு நாயுடு, 'அனைவருடன், அனைவரின் முயற்சியுடன்' தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு நாட்டின் வளர்ச்சிக்காக பொதுமக்களின் சிறப்பான பங்களிப்போடு மத்திய அரசு மேற்கொண்டுள்ள பெரியளவிலான முன்முயற்சிகளைக் கண்காணித்து வழிகாட்டுமாறு அவர்களை கேட்டுக் கொண்டார்.

பொது வாழ்வில் ஆளுநர்களின் பரந்த அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், கொள்கைகளை வடிவமைப்பதிலும் அவற்றைச் செயல்படுத்துவதிலும், சிறிய அளவில் உள்ள வளங்களை திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்வதிலும், பொது வாழ்வில் நன்னடத்தை மற்றும் நெறிமுறைகளை உறுதி செய்வதிலும் அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று வலியுறுத்தினார்.

"ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் அரசமைப்பு அதிகாரியாக செயல்படுவதோடு, ஒரு மூத்த அரசியல் தலைவரின் தார்மீக உரிமையுடன் செயல்பட வேண்டும்" என்று திரு நாயுடு வலியுறுத்தினார்.

மரம் வளர்ப்பு, நீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானம், கழிவு மேலாண்மை போன்ற பருவநிலைக்கு உகந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் இயக்கங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று திரு நாயுடு ஆளுநர்களை கேட்டுக்கொண்டார்.

100 கோடிக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதில் இந்தியாவின் முயற்சிகளைப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கான தயக்கத்தைக் தகர்க்க தேவையான  நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஆளுநர்களை வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771017

----


(Release ID: 1771039) Visitor Counter : 239