குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
Posted On:
05 NOV 2021 12:59PM by PIB Chennai
நாட்டின் இளைஞர்கள், நல்லிணக்கமான அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சமுதாயத்தை உருவாக்க, விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். அனைத்துவிதமான பாகுபாடுகளும் இல்லாத சமுதாயத்தை கட்டமைப்பதே நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்திற்கு செலுத்தும் உண்மையான மரியாதையாகும் என்று அவர் தெரிவித்தார்.
விசாகப்பட்டினத்தில் ஸ்ரீ விஸ்வ விஞ்ஞான வித்ய அத்யாத்மிக்கா பீடத்தின் முன்னாள் தலைவரான திரு உமர் அலிஷாவின் நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் வாழ்க்கை வரலாறு குறித்த நூல் வெளியீட்டு விழாவில் திரு நாயுடு உரையாற்றினார். விடுதலைப் போராட்டத்தின் போது திரு அலிஷாவின் பங்களிப்பு குறித்து குடியரசு துணைத்தலைவர் புகழுரைத்தார். அவர் ஒரு சிறந்த மனிதாபிமானி என்று கூறிய திரு நாயுடு, மகளிர் அதிகாரமயமாக்கல், சமுதாய மேம்பாடு, இலக்கியம் ஆகியவற்றில் திரு அலிஷா ஆற்றிய பங்கு குறித்து குறிப்பிட்டார்.
திரு உமர் அலிஷாவின் ஆன்மீகக் கண்ணோட்டம் பற்றி குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், சமயம் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள், சாதாரண மக்களுக்கு சேவை செய்வதை தங்கள் பணியாகக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். ஆன்மீகமும் , சேவையும் தனித்தனியானவை அல்ல என்பதை மக்களுக்கு எடுத்துச் செல்வதுடன் சமூக நலனில் அக்கறையுடன் செயல்படுவது அவசியம் என்று அவர் கூறினார்.
நாட்டின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த மகளிர் அதிகாரமயமாக்கல் அவசியம் என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். தனிநபர், குடும்பம் மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெண் குழந்தைகள் கல்வி மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முட்டம்செட்டி சீனிவாச ராவ், ஸ்ரீவிஸ்வ விஞ்ஞான வித்ய அத்யாத்மிக்கா பீடத்தின் முன்னாள் தலைவர் திரு உமர் அலிஷா, எழுத்தாளர்கள், மொழியியல் நிபுணர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 1769552)
Visitor Counter : 282