இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட வீரர்களுக்கு விளையாட்டு அமைச்சகம் பதக்கங்களை வழங்கியது, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் நிகழ்வில் பங்கேற்றார்

Posted On: 01 NOV 2021 6:32PM by PIB Chennai

தில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் இன்று நடைபெற்ற விழாவில் கடந்த ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகளை வென்ற அனைவருக்கும் விளையாட்டு அமைச்சகம் பதக்கங்களை வழங்கியது.

தேசிய விளையாட்டு விருதுகள் 2020-ன் அனைத்து வெற்றியாளர்களும் ஏற்கனவே ரொக்க விருதுகளைப் பெற்றிருந்தனர், ஆனால், கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக காணொலி வாயிலாக கடந்த ஆண்டு விளையாட்டு விருதுகள் விழா நடைபெற்றபோது அவர்களால் கோப்பைகள் மற்றும் சான்றுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் மற்றும் விளையாட்டு செயலாளர் திருமதி சுஜாதா சதுர்வேதி, இளைஞர் நலன் செயலாளர் திருமதி உஷா சர்மா மற்றும் அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் இதர அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

2020 ஆகஸ்ட் 29 அன்று, 5 ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் 27 அர்ஜுனா விருதுகள் உட்பட மொத்தம் 74 தேசிய விளையாட்டு விருதுகளை விளையாட்டு அமைச்சகம் வழங்கியது. திங்கட்கிழமை நடைபெற்ற விழாவில், கேல் ரத்னா விருது பெற்ற ராணி ராம்பால், வினேஷ் போகட் மற்றும் மாரியப்பன் தங்கவேலு ஆகியோரும் லோவ்லினா போர்கோஹைன், இஷாந்த் சர்மா, அதானு தாஸ், சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் ஷெட்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விருது பெற்றவர்களிடம் உரையாடிய திரு அனுராக் தாக்கூர், "பல ஆண்டுகள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்குப் பிறகு விளையாட்டு வீரர்களால் பெறப்படும் ஒரு மதிப்புமிக்க விருது தேசிய விளையாட்டு விருதுகள் ஆகும். விருது பெற்ற அனைவருக்கும், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துகள். விருது பெற்றவர்களின் பயணம் இத்துடன் முடிவடையாது, சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது, திறமையான விளையாட்டு வீரர்களைத் தேடி, அவர்களை வளர்த்தெடுத்து, சர்வதேச அளவில் பதக்கம் வெல்லும் திறன் கொண்டவர்களாக மாற்ற வேண்டும். எனவே, எதிர்காலத்தில் இந்தியாவுக்காக பதக்கங்களை வெல்லக்கூடிய குறைந்தது ஐந்து விளையாட்டு வீரர்களையாவது செம்மைப்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுக்குமாறு அனைத்து விளையாட்டு வீரர்களையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1768604

****


(Release ID: 1768670) Visitor Counter : 297