உள்துறை அமைச்சகம்
கூட்டுறவு சங்கங்களின் கணினிமயமாக்கல் உள்ளிட்ட திட்டங்களை
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்
Posted On:
30 OCT 2021 6:34PM by PIB Chennai
முதலமைச்சர் காசியாரி நலத்திட்டம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் கணினிமயமாக்கலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். உத்தரகாண்ட் முதல்வர் திரு புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் திரு அஜய் பட் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், திரு அடல் பிஹாரி வாஜ்பாய் உத்தரகாண்ட் மாநிலத்தை உருவாக்கினார் என்பதையும், உத்தரகாண்ட் உருவாக்கக் கோரிக்கையை முன்வைத்து பல இளைஞர்கள் உயிர் தியாகம் செய்ததையும் நினைவு கூர்ந்தார்.
உத்தரகாண்ட் இளைஞர்களின் கோரிக்கைக்கு எங்கள் கட்சியும் ஆதரவாக இருந்தது என்று கூறிய திரு அமித் ஷா, திரு அடல் பிஹாரி வாஜ்பாய் உருவாக்கிய உத்தரகாண்ட் மாநிலத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி மேம்படுத்துவார் என்றும், மாநிலத்தின் முழு வளர்ச்சி உறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.
இன்று மூன்று திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். முதலாவதாக, உத்தரகாண்டின் அனைத்து முதன்மை வேளாண் கடன் சங்கங்களையும் கணினிமயமாக்கும் பணி இன்று நிறைவடைந்துள்ளது. கணினிமயமாக்கலின் காரணமாக உறுப்பினர்கள் எந்த மோசடிகளையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை.
வேளாண் கடன் சங்கங்களை மாவட்ட வங்கிகளுடனும், மாவட்ட வங்கிகளை மாநில கூட்டுறவு வங்கிகளுடனும், மாநில கூட்டுறவு வங்கிகளை நபார்டுடனும் நேரடியாக இணைக்க கணினிமயமாக்கல் உதவுகிறது மற்றும் விவசாயிகளுக்கான அனைத்து திட்டங்களும் சங்கங்கள் மூலம் நேரடியாக விவசாயிகளை சென்றடைகிறது. நாட்டிலுள்ள மிகச் சில மாநிலங்களே இதுவரை இந்தப் பணியைச் செய்ய முடிந்துள்ளன.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், இந்திய அரசு ஒரு செயல் திட்டத்தைத் தயாரித்து வருவதாகவும், அதன் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து வேளாண் கடன் சங்கங்ககளையும் கணினிமயமாக்கவும், மாவட்ட வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், நபார்டுடன் அவற்றை இணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இன்று செய்யப்பட்டுள்ள இரண்டாவது பெரிய பணி முதலமைச்சர் காசியாரி நலத்திட்டத்தின் துவக்கம் என்று திரு அமித் ஷா கூறினார். சவாலான பருவநிலைகளின் போது மலையகத்தில் உள்ள விலங்குகளுக்கு தீவனம் வழங்குவதில் பெண்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதை நாம் அறிவோம். அறிவியல் முறையில் சத்தான கால்நடை தீவனம் தயாரிக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.
இன்று மூன்றாவது பணியாக கூட்டுறவு பயிற்சி மைய திறப்பு விழா நடந்துள்ளது என்றார் அவர். கூட்டுறவு இயக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்த கூட்டுறவு பயிற்சி மையங்கள் மிகவும் முக்கியமானவை. கூட்டுறவு இயக்கம் முந்தைய அரசுகளால் பலவீனப்படுத்தப்பட்டது, ஆனால், புதிய கூட்டுறவு அமைச்சகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த ஆண்டு உருவாக்கி, கூட்டுறவு நிறுவனங்களுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் நலனுக்காக பெரும் பணியைச் செய்துள்ளார் என்று அமைச்சர் கூறினார்.
மேலும் பேசிய அவர், திரு மோடி ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஏழைகளின் வலி அவரது இதயத்திற்கு நெருக்கமானது என்றார். முதலமைச்சர் காசியாரி நலத்திட்டத்தின் கீழ் 30 சதவீத மானியத்தில் கால்நடைத் தீவனம் கிலோ ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வீதம் வழங்கப்படும். இதன் மூலம் பெண்கள் பல பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றப்படுவார்கள்.
வெள்ளம் மற்றும் கொவிட்-19 பெருந்தொற்றின் போது மாநிலத்தில் எதிர்க்கட்சி எங்கே இருந்தது என்று கேட்ட அவர், ஊழல் மற்றும் மோசடிகளின் உருவமாக எதிர்கட்சி உள்ளது என்றும் எந்த மாநிலத்தின் நலனுக்காகவும் அதனால் செயல்பட முடியாது என்றும் கூறினார்.
எங்கள் கட்சியால் மட்டுமே ஏழைகளுக்கு நலன்களை வழங்க முடியும், திரு மோடியின் தலைமையில் நல்ல நிர்வாகத்தை வழங்க முடியும் என்று திரு அமித் ஷா மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1767942
***
(Release ID: 1767969)