அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு இடையேயான ஒத்துழைப்பு 2 பில்லியன் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
13 OCT 2021 4:29PM by PIB Chennai
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு இடையேயான ஒத்துழைப்பு 2 பில்லியன் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.
தூதர் உகோ அஸ்துட்டோ தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய குழுவினரை வரவேற்ற அமைச்சர், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தம் சமீபத்தில் ஐந்து வருட காலத்திற்கு புதுப்பிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய-இந்தியா கூட்டை வலுப்படுத்தவும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள பலதரப்பு அளவில் பகிரப்பட்ட அணுகுமுறையை உருவாக்கவும் அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
சாதாரண மனிதனின் வாழ்வை எளிதாக்குவது தான் அனைத்து அறிவியல் முயற்சிகளின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிவுறுத்தலைக் குறிப்பிட்ட அமைச்சர், சுகாதாரம், விவசாயம், நீர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயிரி தொழில்நுட்பம், மின்சார போக்குவரத்து, ஐசிடி, செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் சுற்றுச்சூழல். போன்ற துறைகளில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பை ஆழப்படுத்த வேண்டும் என்றார்.
ஐரோப்பிய ஒன்றியத் தூதர் உகோ அஸ்டுடோ பேசுகையில், தூய்மையான எரிசக்தி, மரபணு வரிசைமுறை, அண்டார்டிகாவில் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகள் மற்றும் உயர் செயல்திறன் கணினியியலை பயன்படுத்தி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதோடு, மக்களுக்கிடையேயான தொடர்பை ஆழப்படுத்த அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763627
*****
(Release ID: 1763704)
Visitor Counter : 211