ஜவுளித்துறை அமைச்சகம்

ரூ.160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான கைவினைப் பொருட்கள் குழும மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடர ஜவுளி அமைச்சகம் ஒப்புதல்

Posted On: 05 OCT 2021 4:21PM by PIB Chennai

விரிவான கைவினைப் பொருட்கள் குழும மேம்பாட்டுத் திட்டத்தை ரூ 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடர ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மார்ச் 2026 வரை இந்த திட்டம் தொடரும். கைவினை கைவினைஞர்களுக்கு உள்கட்டமைப்பு ஆதரவு, சந்தை அணுகல், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு ஆதரவு போன்றவை இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதை விரிவான கைவினைப் பொருட்கள் குழும மேம்பாட்டுத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நவீன உள்கட்டமைப்பு, சமீபத்திய தொழில்நுட்பம், போதிய பயிற்சி மற்றும் மனிதவள மேம்பாட்டு உள்ளீடுகள், சந்தை இணைப்புகள் மற்றும் உற்பத்தி பல்வகைப்படுத்தலுடன் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி வசதிகளை அமைக்க கைவினைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு உதவுவது இந்த குழுக்களை அமைப்பதன் முக்கிய நோக்கம் ஆகும்.

அடிப்படை ஆய்வு மற்றும் செயல்பாட்டு திட்டமிடல், திறன் பயிற்சி, மேம்பட்ட கருவிகள், சந்தைப்படுத்தல் நிகழ்வுகள், கருத்தரங்குகள், விளம்பரம், வடிவமைப்பு பட்டறைகள், திறன் மேம்பாடு போன்ற உதவிகள் வழங்கப்படும். பொது வசதி மையங்கள், எம்போரியங்கள், மூலப்பொருள் வங்கிகள், வர்த்தக வசதி மையங்கள், பொது உற்பத்தி மையங்கள், வடிவமைப்பு மற்றும் வள மையங்கள் போன்ற ஆதரவும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

மத்திய/மாநில கைவினைப் பொருட்கள் நிறுவனங்கள்/தன்னாட்சி நிறுவனம்/பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு அமைப்புகள்/கைவினைஞர்களின் உற்பத்தி நிறுவனம்/துறையில் நல்ல அனுபவம் கொண்ட பதிவு செய்யப்பட்ட சிறப்பு நோக்க அமைப்பு ஆகியவற்றால் ஒருங்கிணைந்த திட்டங்கள் மேம்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்படும் தேவைக்கேற்பவும், விவரமான திட்ட அறிக்கையின் படியும் இது செயல்படும்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சிதறிய கைவினைஞர்களை ஒருங்கிணைத்தல், அவர்களின் சிறிய அளவிலான தொழில் நிறுவனங்களை கட்டமைத்தல் மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் இணைத்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படும். 10,000-க்கும் மேற்பட்ட கைவினைஞர்களைக் கொண்ட மிகப்பெரிய கைவினை குழுக்கள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக இந்த திட்டத்தின் கீழ்  தேர்ந்தெடுக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761118

----



(Release ID: 1761168) Visitor Counter : 212