குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
வடகிழக்குப் பகுதியில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் ஆலோசனை
Posted On:
04 OCT 2021 6:40PM by PIB Chennai
வடகிழக்குப் பகுதியில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு, மேகாலயா தலைநகர் ஷில்லாங் சென்றுள்ளார். அங்கு நடந்த ‘வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சியில் வடகிழக்கு கவுன்சிலின் பங்கை மாற்றுதல்’ என்ற பயிலரங்கில் உரையாற்றிய திரு. எம். வெங்கையா நாயுடு கூறியதாவது:
வடகிழக்குப் பகுதியின் முன்னேற்றத்துக்குந் தடையாக உள்ள பிரச்னைகளை விரைவாக தீர்ப்பதன் மூலம் வடகிழக்குப் பகுதியில் துரித வளர்ச்சிக்கு வடகிழக்கு கவுன்சில் தூண்ட வேண்டும். நாட்டின் பல பகுதிகளில் சமநிலையற்ற முன்னேற்றம் நிலவினால், இந்தியாவின் முன்னேற்றத்தை நிறைவு செய்ய முடியாது. வடகிழக்குப் பகுதி முன்னேறினால் , நாடு முன்னேறும். அது பின்னடைந்தால், நாடும் பின்னடையும். பல துறைகளில் சிறந்த நடைமுறைகளை வடகிழக்கு மாநிலங்கள் பகிர்ந்து, பரஸ்பர பலனை பெற வேண்டும். வளர்ச்சிப் பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு, மாநிலங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றாக இணைந்து இந்தியக் குழுவாகச் செயல்பட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில் அனைத்துத் துறைகளிலும் சீர்திருத்தப் பாதையில் இறங்கியுள்ளது. சுலபமாக தொழில் செய்வதும், எளிமையாக வாழ்வதும் முக்கிய நோக்கங்கள். அவசர உணர்வுடன் வேலை செய்வது வழக்கமாகிவிட்டது. நாம் மெதுவாக செல்ல முடியாது. மோசமான தரத்துடன் நாம் திருப்தியடைய முடியாது. சிறப்பானதைச் செய்வதற்கு நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். ஒவ்வொரு திட்டத்திலும் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். நேரடிப் பணிப் பரிமாற்றம் போன்ற திட்டங்கள், பயன்கள் சென்றவடைவதை உறுதி செய்வதில் முக்கியமானது.
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாடும் வேளையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். ஏழ்மை, ஏற்றத் தாழ்வுகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற இடைவெளிகள் அகற்றப்பட வேண்டும். கல்வி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். அனைத்தும் உள்ளடங்கிய தற்சார்பு இந்தியா உருவாக்கும்போது, பொதுச் சுகாதார கட்டமைப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
வடகிழக்குப் பகுதியில் சுமார் 45 மில்லியன் மக்கள் உள்ளனர். அவர்களின் கனவுகள் நனவாக்கப்பட வேண்டும். இதற்கு வடகிழக்கு கவுன்சில் ஒரு பயனுள்ள கருவியாக இருக்க வேண்டும். மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
தொழில் முனைவு, தொடக்க நிறுவனங்கள் மற்றும் திறன் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு திரு. வெங்கையா நாயுடு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மேகாலயா முதல்வர் திரு கான்ராட் சங்மா, வடகிழக்குப் பகுதி வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760872
-----
(Release ID: 1760914)
Visitor Counter : 204