கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி
Posted On:
02 OCT 2021 2:59PM by PIB Chennai
தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் மற்றும் நம் இந்தியா நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் இத்தருணத்தில் (Azadi Ka Amrit Mahotsav) வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி இன்று 02.10.2021 நடைபெற்றது.
இந்த மரகன்று நடும் பணியினை திரு. தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப. வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் அவர்கள் துறைமுக பள்ளி வளாகத்தில் துவக்கி வைத்தார்கள். துறைமுகத்தின் துறை தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், துறைமுக பள்ளி ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுப்பதற்கு இவ்விழாவில் பங்கேற்ற அனைவரும் முககவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்து பங்கேற்றனர்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 620 ஏக்கர் நிலப்பரப்பு பசுமையாக மாற்றப்பட்டுள்ளது, மேலும் துறைமுகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் புல்வெளி பூங்காக்கள் 7.6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்தினை மேம்படுத்துவதற்கு கடற்சார் இந்தியா தொலைநோக்கு பார்வை-2030 (Maritime India Vision 2030) என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுகங்களின் காற்றின் தரத்தை உயர்த்தவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் மற்றும் ஒலி மாசினை குறைக்கவும் துறைமுகத்தில் 10,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளது.
இம்மரக்கன்று நடும் பணியினை துவக்கி வைத்து திரு. தா.கி.ராமச்சந்திரன், இ.ஆ.ப. வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பைக் கழக தலைவர் அவர்கள் பேசுகையில், இந்திய துறைமுகங்களில் முதல் பசுமை துறைமுகமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் திகழ்வதற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் துறைமுக பகுதியிலுள்ள காற்று, நிலம், நீர் மற்றும் மண் வளம் போன்ற அனைத்தின் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் துறைமுகம் மேன்மையடையும் என்று கூறினார்.
மேற்சொன்ன தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
******
(Release ID: 1760323)
Visitor Counter : 164