அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நாடு முழுவதும் அறிவியல் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் : டாக்டர் ஜித்தேந்திர சிங் தகவல்

Posted On: 29 SEP 2021 5:31PM by PIB Chennai

குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினர் இடையே அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்க நாடு முழுவதும் அறிவியல் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

மக்கள் இடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வகங்களில், அறிவியல் அருங்காட்சியகத்தை அமைக்க சிஎஸ்ஐஆர்  மற்றும் அறிவியல் அருங்காட்சியகங்களின் தேசிய கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், மத்திய இணைஅமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

அதன்பின் டாக்டர் ஜித்தேந்திர சிங் பேசுகையில், ‘‘21ம் நூற்றாண்டு சவால்களை சந்திக்க மக்கள் இடையே அறிவியல் சிந்தனையை ஏற்படுத்த வேண்டும். மக்கள் இடையே அறிவியல் சிந்தனை விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை, சமீபத்திய கொரோனா பெருந்தொற்று வலியுறுத்தியது. இந்த நோக்கில் இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம், அறிவியல் தகவல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.

மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி பேசுகையில், ‘‘ இந்த ஒப்பந்தம், நமது பிரதமரின் தொலைநோக்கை நிறைவேற்றும் வகையில், சிஎஸ்ஐஆர் மற்றும் அறிவியல் அருங்காட்சியக தேசிய கவுன்சிலை இணைக்கும். இந்த முயற்சியை வெற்றிகரமாக அமல்படுத்த, தமது அமைச்சகம் அனைத்து உதவிகளையும் வழங்கும்’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759323

----



(Release ID: 1759450) Visitor Counter : 237