குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அண்டை நாடுகளில் வளர்ந்து வரும் புவி அரசியல் சூழ்நிலை, எல்லை பாதுகாப்பு படைகளுக்கு புதிய சவாலாக இருக்கக்கூடும்: குடியரசு துணைத் தலைவர்
Posted On:
29 SEP 2021 5:16PM by PIB Chennai
நம் அண்டை நாடுகளில் வளர்ந்து வரும் புவி அரசியல் சூழ்நிலை, எல்லை பாதுகாப்பு படைகளுக்கு புதிய சவாலாக இருக்கக்கூடும் என்றும், அமைதிக்கு எதிரானவர்களின் மோசமான செயல்களை எல்லை பாதுகாப்பு படை தொடர்ந்து முறியடிக்கும் என்றும் குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களைக் கடத்துவதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துவது சமீபத்திய சவாலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எல்லை பாதுகாப்பு படையின் ஜோத்பூர் எல்லைப்பகுதி தலைமையகத்திற்கு இன்று நேரில் சென்ற அவர், அதிகாரிகளிடையே உரையாற்றுகையில், “கடந்த 56 வருடங்களாக நாட்டின் எல்லைகளை பாதுகாத்துவரும் எல்லை காவல் படையின் பணி மிகவும் போற்றத்தக்கது”, என்று பாராட்டினார்.
கடந்த 1971- ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பாகிஸ்தானுக்கு எதிராக துணிச்சலாக போராடி இந்த படையைச் சேர்ந்த வீரர்கள் நாட்டிற்கு பெருமையை தேடித் தந்ததாக அவர் குறிப்பிட்டார். நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதாகவும் திரு வெங்கையா நாயுடு கூறினார்.
ஜோத்பூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை- மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தில் குடியரசு துணைத் தலைவர்:
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜோத்பூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை- மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்ற குடியரசு துணைத் தலைவர், அங்குள்ள விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். “தொழில்நுட்பங்கள், ஆய்வகங்களில் மட்டுமே முடங்கி விடக்கூடாது, அறிவியல் சார்ந்த புரிதல் விவசாயிகளுக்கும் பரிமாறப்பட வேண்டும்”, என்று அப்போது அவர் கூறினார்.
வேளாண்மையை நிலையானதாகவும் லாபகரமானதாகவும் மாற்றுவதற்காக பாரம்பரிய நடைமுறைகளுடன் புதிய தொழில்நுட்பங்களை இணைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கம் முதல் விளைச்சலை அதிகரிப்பது வரை விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புதுமையான முறைகளைக் கண்டறியுமாறு விஞ்ஞானிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த இரண்டு நிகழ்வுகளின் போதும் ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் மாநில அமைச்சர் டாக்டர் புலகி தாஸ் கல்லா, மாநிலங்களவை உறுப்பினர் திரு ராஜேந்திர கெலாட், எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759309
-----
(Release ID: 1759418)
Visitor Counter : 299