குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தகவல் மற்றும் இணையப் போர் போன்ற புதிய சவால்களுக்கு படைகள் தயாராக வேண்டும் - குடியரசு துணைத் தலைவர்
Posted On:
27 SEP 2021 6:55PM by PIB Chennai
வழக்கமான போர்களுக்கு மட்டுமில்லாமல், தகவல் மற்றும் இணையப் போர் மற்றும் போர்க்களத்தில் ரோபாட்டிக்ஸ் மற்றும் ட்ரோன்களின் அதிகரித்து வரும் பயன்பாடு ஆகியவற்றிலும் தங்களின் வல்லமையை நிலைநிறுத்திக்கொள்ள படைகள் தயாராக வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
நம்மைச் சுற்றியுள்ள புவி-மூலோபாய சூழல் கணிக்க முடியாததாக மாறி வருகிறது என்று அவர் கூறினார். "வெளியிலிருந்தும் உள்ளேயும் நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.
ஜெய்சால்மரில் இன்று நடைபெற்ற இந்திய ராணுவத்தின் 12 ரேபிட் பிரிவின் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடனான உரையாடலின் போது பேசிய குடியரசு துணைத்தலைவர், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு சமாதானமே முக்கிய தேவை என்றும் நமது எல்லைகளிலும் நாட்டுக்குள்ளும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் முக்கிய பொறுப்பு நமது ராணுவத்திற்கு உள்ளது என்றும் வலியுறுத்தினார். இந்திய இராணுவத்தின் வீரத்தை பாராட்டிய அவர், இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் எதிரி சக்திகளின் எந்தவொரு முயற்சியும் நமது பாதுகாப்பு படையினரால் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என்றார்.
ராஜஸ்தானுக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத்தலைவர், 'ஜெய்சால்மர் போர் அருங்காட்சியகத்தை' இன்று பார்வையிட்டார், அங்கு அவரை 12 ரேபிட் தளபதி மேஜர் ஜெனரல் அஜீத் சிங் கஹ்லோட் வரவேற்றார். தேசத்தைப் பாதுகாப்பதற்காகவும், தார் பாலைவனத்தில் கடுமையான தட்பவெப்ப சூழ்நிலைகளில் எல்லைகளைக் காப்பதற்காகவும் இந்திய ராணுவத்தின் போர் கோடாரி பிரிவை (12 ரேபிட்) அவர் பாராட்டினார். எதிரியின் எந்தவொரு செயலுக்கும் இந்திய ராணுவம் தகுந்த பதிலளிப்பதாக அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளின் போது ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா மற்றும் ராஜஸ்தான் அமைச்சர் டாக்டர் புலகி தாஸ் கல்லா ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758652
*****************
(Release ID: 1758679)
Visitor Counter : 266