குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

எதிர் காலத்திற்கு தகுந்தவாறு உயர்நிலை அறிவியலில் கவனம் செலுத்துமாறு சிஎஸ்ஐஆர் நிறுவனத்திற்கு குடியரசு துணைத் தலைவர் கோரிக்கை

Posted On: 26 SEP 2021 12:51PM by PIB Chennai

எதிர் காலத்திற்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொண்டு, உயர்நிலை அறிவியலில் கவனம் செலுத்துமாறு அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தை (சிஎஸ்ஐஆர்) குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

சிஎஸ்ஐஆரின் 80-வது நிறுவன தினத்தில் இன்று கலந்து கொண்டு பேசிய அவர், நீண்டகால அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகள் தேவைப்படும் சவால்களை எதிர்கொள்ளுமாறு சிஎஸ்ஐஆர் ஆய்வகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு  கோரிக்கை விடுத்தார். குறிப்பாக, வேளாண் ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்குமாறு அவர் வலியுறுத்தினார். பருவநிலை மாற்றம், மாசு, தொற்றுநோய் மற்றும் பெருந்தொற்றின் பரவல்கள் போன்ற சவால்களில் அறிவியல் சமூகத்தின் கவனம் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 பெருந்தொற்று என்பது எதிர்பாராத நெருக்கடிகளுள் ஒன்று மட்டுமே என்றும், மேலும் பல சவால்கள் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டிய குடியரசு துணைத் தலைவர், எதிர்பாராமல், திடீரென ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு சிஎஸ்ஐஆர் போன்ற நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “பல்வேறு சவால்களை எதிர் கொள்ளவும், மனித சமூகத்தின் நலனில் பங்கு கொள்ளவும் மேற்கொள்ளப்படும் புதிய ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்த தெளிவான திட்ட அறிக்கையை சிஎஸ்ஐஆரின் ஒவ்வொரு ஆய்வகமும் தயாரிக்கவேண்டும்”, என்று அவர் வலியுறுத்தினார்.

விண்வெளி, அணுசக்தி, பெருங்கடல் அறிவியல், பாதுகாப்பு ஆராய்ச்சி உள்ளிட்ட அறிவியல் உலகில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருப்பதாகத் தெரிவித்த அவர், 75-வது சுதந்திர ஆண்டை நாடு கொண்டாடும் இந்த வேளையே, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்கான சரியான தருணம் என்று கூறினார். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும், அவர்களின் வாழ்வை சுமூகமாக மாற்றுவதும்தான் அறிவியலின் நோக்கம் என்றார் அவர்.

ஆராய்ச்சி வெளியீடுகளில் உலகளவில் இந்தியா மூன்றாம் இடம் வகிப்பதாகக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், சர்வதேச அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவின் நிலையை உயர்த்திய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தொழில்துறையின் முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவாக இல்லை என்று அவர் கூறினார். முன்னணி அறிவியல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, முக்கிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைக் கண்டறிந்து, அவற்றில் முதலீடு செய்யுமாறு பெரு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளை திரு நாயுடு வலியுறுத்தினார். “இதன் மூலம் நிதி அதிகரிப்பது மட்டுமல்லாமல் தரம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளும் மேன்மையடையும்”, என்றும் அவர் கூறினார்.

பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டை வழிநடத்திச் சென்ற அறிவியல் மற்றும் மருத்துவத் துறையினரை திரு வெங்கையா நாயுடு வெகுவாகப் பாராட்டினார். “85 கோடி கொவிட் தடுப்பூசிகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனைஎன்று கூறிய அவர், முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவேக்சின் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகளால் இது சாத்தியமானது என்று குறிப்பிட்டார்.

இளம் விஞ்ஞானிகள் விருதுகளை வழங்கிய குடியரசு துணைத் தலைவர், பள்ளிக் குழந்தைகளுக்கான சிஎஸ்ஐஆர் புதிய கண்டுபிடிப்புகள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், சர்வதேச அளவில் இந்தியா போட்டியிடுவதற்காக, அடுத்த 10 ஆண்டுகளில் தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்டத்தை சிஎஸ்ஐஆர் மற்றும் அனைத்து அறிவியல் துறைகளும் இணைந்து ஆலோசித்து உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்தியாவில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும், சரியான பயிற்சி மற்றும் ஊக்குவிப்பு இருந்தால் அவர்களால் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

மத்திய அரசுக்கான முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் திரு சேகர் சி. மாண்டே, சிஎஸ்ஐஆர்- மனிதவள மேம்பாட்டு குழுமத்தின் தலைவர் டாக்டர் அஞ்சன் ரே, மூத்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758231

----  



(Release ID: 1758267) Visitor Counter : 218