சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
‘சைகை மொழி தினத்தை’ சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாளை கொண்டாடவுள்ளது
Posted On:
22 SEP 2021 6:22PM by PIB Chennai
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் தன்னாட்சி பெற்ற அமைப்பான புது தில்லியை சேர்ந்த இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (ஐஎஸ்எல்ஆர்டிசி), 'சைகை மொழி தினத்தை' டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம், 15 ஜன்பத், புதுதில்லியில் நாளை கொண்டாடவுள்ளது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமை விருந்தினராகவும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்கள், திருமிகு பிரதிமா பவுமிக் மற்றும் திரு ஏ நாராயணசாமி ஆகியோர் மதிப்புறு விருந்தினர்களாகவும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை செயலாளர் திருமதி அஞ்சலி பாவ்ரா, பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் கூடுதல் செயலாளர் திரு சந்தோஷ் சாரங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை இணை செயலாளரும் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநருமான டாக்டர் பிரபோத் சேத், அகில இந்திய காது கேளாதோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு வி கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் 23-ஐ சர்வதேச சைகை மொழி தினமாக அறிவித்ததிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஐஎஸ்எல்ஆர்டிசி இதை கொண்டாடுகிறது. இந்திய சைகை மொழிகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்துவதும் காது கேளாதவர்களுக்கான தகவல் மற்றும் தொடர்பு அணுகல் குறித்து தெரியப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். மக்கள் கல்வி கற்பதில் சைகை மொழி முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், காது கேளாதவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சியை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
‘இந்திய சைகை மொழி பயணம்’ பற்றிய ஆவணப்படத்தை நிகழ்ச்சியின் போது ஐஎஸ்எல்ஆர்டிசி வெளியிடும். மேலும் செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நான்காவது இந்திய சைகை மொழி போட்டி, 2021-ன் வெற்றியாளர்களையும் அறிவிக்கும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெற்றியாளர்களுடன் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் உரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களை 1 முதல் 12-ம் வகுப்பு வரை இந்திய சைகை மொழியாக (டிஜிட்டல் வடிவத்தில்) காது குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் (என்சிஇஆர்டி) அக்டோபர் 06, 2020 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஎஸ்எல்ஆர்டிசி கையெழுத்திட்டது. முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகங்களை மாற்றுவதற்கான திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது, இதன் மின்-உள்ளடக்கம் நிகழ்ச்சியின் போது வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757042
------
(Release ID: 1757092)
Visitor Counter : 510