பிரதமர் அலுவலகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழுவின் 21-வது கூட்டத்தில் காணொலி மூலம் பிரதமர் பங்கேற்றார்

Posted On: 17 SEP 2021 6:20PM by PIB Chennai

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழுவின் 21-வது கூட்டத்தில் காணொலி மூலமும், ஆப்கானிஸ்தான் குறித்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு-சிஎஸ்டிஓ கூட்டு அமர்வில் காணொலி செய்தி மூலமும் பிரதமர் பங்கேற்றார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழுவின் 21-வது கூட்டம் 2021 செப்டம்பர் 17 அன்று கலப்பு முறையில் துஷான்பேவில் நடைபெற்றது.

தஜிகிஸ்தான் அதிபர் மேன்மைமிகு எமோமாலி ரஹ்மோன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

காணொலி இணைப்பின் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உச்சி மாநாட்டில் உரையாற்றினார். துஷான்பேவில் இந்தியாவின் சார்பாக வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்ஷங்கர் பங்கேற்றார். 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிராந்தியத்தில் வளர்ந்து வரும் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து தமது உரையில் எடுத்துரைத்த பிரதமர்மிதவாத மற்றும் முன்னேற்றம் சார்ந்த கலாச்சாரம் மற்றும் விழுமியங்களின் கோட்டையாக திகழும் இந்த பிராந்தியத்தின் வரலாற்றுக்கு எதிராக இது இருப்பதாக அவர் கூறினார்.

பயங்கரவாதம் தொடர்பான இந்த போக்கை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் மேலும் தீவிரப்படுத்தக் கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக இந்த பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களுக்கு பொருந்தக்கூடிய மிதவாத, அறிவியல் சார்ந்த மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை ஊக்குவிப்பதற்கான திட்டத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பணியாற்றலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.

அதன் வளர்ச்சி திட்டங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் இந்தியாவின் அனுபவம் குறித்து பேசிய பிரதமர், இந்த திறந்தவெளி தீர்வுகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இதர உறுப்பினர்களுடன் பகிர தயாராக இருப்பதாக கூறினார்.

பிராந்தியத்தில் தொடர்புகளை கட்டமைப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், தொடர்புக்கான திட்டங்கள் வெளிப்படையாகவும், அனைவரும் பங்கு கொள்ளக் கூடியதாகவும், ஆலோசனை வழங்கக் கூடியதாகவும் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த கூடிய வகையில் இருக்க வேண்டும் என்றார். 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை தொடர்ந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) ஆகியவற்றுக்கு இடையே ஆப்கானிஸ்தான் குறித்த கூட்டம் நடைபெற்றது. காணொலி செய்தி மூலம் பிரதமர் இதில் பங்கேற்றார்.

பிராந்தியத்தில் பயங்கரவாதம் மீதான 'பூஜ்ய பொறுத்துக் கொள்ளும்' கொள்கையை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்க வேண்டும் என்று தனது காணொலி செய்தியில் ஆலோசனை தெரிவித்த பிரதமர், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏற்படக்கூடிய போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் மனிதக் கடத்தல் ஆபத்துகள் குறித்து எடுத்துரைத்தார். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி குறித்து பேசிய அவர், ஆப்கான் மக்களுக்கு இந்தியாவின் ஆதரவை தெரிவித்தார்.

*****************



(Release ID: 1755878) Visitor Counter : 535