எஃகுத்துறை அமைச்சகம்

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்கள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் திரு. ராம் சந்திர பிரசாத் சிங், நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குமாறு வலியுறுத்தினார்

Posted On: 14 SEP 2021 5:57PM by PIB Chennai

செயில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த எஃகு ஆலைகள் மற்றும் இதர மத்திய எஃகு பொதுத்துறை நிறுவனங்களின் நில விஷயங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் ஒன்றுக்கு மத்திய எஃகுத்துறை அமைச்சர் திரு. ராம் சந்திர பிரசாத் சிங் தலைமை வகித்தார். மத்திய பொதுத்துறை எஃகு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மத்திய பொதுத்துறை எஃகு நிறுவனங்களிடம் இருக்கும் நிலம் தொடர்பான விஷயங்களைத் அமைச்சர் ஆய்வு செய்தார். ஆலைகள் மற்றும் சுரங்கங்களின எதிர்காலத் திட்டங்கள் மற்றும் விரிவாக்கத்திற்குத் தேவையான நிலங்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள், குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் மற்றும் இதர நிலங்கள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

மத்திய எஃகு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் திரு. ஃபக்கன் சிங் குலஸ்தே, எஃகுத்துறைச் செயலாளர் திரு. பிரதீப் குமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டிடங்களில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களையும், அங்கீகரிக்கப்படாதவர்களையும் வெளியேற்ற மத்திய பொதுத்துறை எஃகு நிறுவனங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சருக்கு விளக்கப்பட்டது. நிலங்கள் மற்றும் கட்டிடங்களைப் பயனுள்ள வகையில் பொதுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக ஆக்கிரமிப்புகளை விரைந்து களையுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

நில ஆவணங்களை மின்னணுமயமாக்குமாறும், அவற்றைப் பாதுகாப்பாக வைக்குமாறும் அவர் வலியுறுத்தினார். மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் வசம் இருக்கும் நிலங்களை எதிர்காலத் தேவைகளுக்காக சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார்.

 மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754826



(Release ID: 1754896) Visitor Counter : 165


Read this release in: English , Urdu , Hindi , Punjabi