தேர்தல் ஆணையம்
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு
Posted On:
09 SEP 2021 11:41AM by PIB Chennai
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான திரு கே பி முனுசாமி, திரு. ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த மே 7-ஆம் தேதி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதேபோல மேற்கு வங்கம், அசாம், மத்தியப் பிரதேசத்திலும் தலா ஒருவர் ராஜினாமா செய்து, மகாராஷ்டிராவில் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததால் மொத்தம் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் தற்போது காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அக்டோபர் 4-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 15 (புதன்கிழமை) அன்று வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 22 (புதன்கிழமை). வேட்புமனுக்கள் செப்டம்பர் 23 (வியாழக்கிழமை) அன்று பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 27 (திங்கட்கிழமை) ஆகும்.
கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தத் தேர்தலை நடத்தும்படி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளின் போது கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு 5 மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753444
***
(Release ID: 1753461)