உள்துறை அமைச்சகம்

கர்நாடகாவின் தேவநகரேவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்

Posted On: 02 SEP 2021 7:18PM by PIB Chennai

மொத்தம் ரூ 50 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கர்நாடகாவின் தேவநகரேவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.

காந்தி பவன், காவல் பொதுப் பள்ளி மற்றும் ஜி எம் தொழில்நுட்ப நிறுவனத்தின் மைய நூலகத்தை அவர் திறந்து வைத்தார். விடுதலைப் போராட்ட வீரர்களை கவுரவித்த அவர், நாட்டின் சுதந்திர போராட்டத்தில் அவர்களின் மதிப்புமிக்க பங்குக்காக நன்றி தெரிவித்தார். கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் எஸ் பொம்மை மற்றும் இதர பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், கடந்த இரு வருடங்களாக இந்தியாவும், உலகமும் பெருந்தொற்றை எதிர்கொண்டு வருவதாக கூறினார். ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே கொவிட்-19 பெருந்தொற்று பெரிய சவால்களை விடுத்த போதிலும், கொவிட்டுக்கு எதிரான போரை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா சிறப்பாகவும், வலுவுடனும் எதிர்கொண்டதாகவும், தற்போது கொவிட்டில் இருந்து நாம் கிட்டத்தட்ட வெளியே வந்து விட்டோம் என்றும் அவர் கூறினார்.

கொவிட்டுக்கு எதிரான போரை கர்நாடகா சிறப்பாக மேற்கொண்டதாகவும், 5 கோடியே 20 லட்சம் பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் திரு அமித் ஷா கூறினார். இவர்களில் 4 கோடி பேருக்கு முதல் டோசும், 1.16 கோடி பேருக்கு இரண்டாவது டோசும் வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் திரு பசவராஜ் பொம்மையின் தலைமையின் கீழ் செப்டம்பர் இறுதிக்குள் 90 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும், மக்களுடன் இணைந்து அரசு பணிபுரிந்தால் சாதனைகளை புரியலாம் என்பதற்கான எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறினார்.

ஏழைகள், பின்தங்கியோர் மற்றும் பழங்குடியினரை பற்றியே பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் சிந்தித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். கொவிட்-19 பெருந்தொற்று நாட்டின் ஏழைகளை மிகவும் பாதித்து, தினக்கூலிகள் ஒரு வேளை உணவுக்கே சிரமப்பட்ட நிலையில், மே முதல் நவம்பரில் தீபாவளி வரை ஒவ்வொருவருக்கும் 5 கிலோ இலவச உணவு தானியங்களை முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது திரு நரேந்திர மோடி அரசு வழங்கியது. நாட்டிலுள்ள 80 கோடி மக்களுக்கு 10 மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக திரு மோடி அரசு வழங்கியது என்று திரு ஷா கூறினார்.

பெருந்தொற்றுக்கு எதிரான போரில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்ததாகவும், ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்களும் குழந்தைகளும் பசியோடு உறங்கக்கூடாது என்பதை பிரதமர் உறுதி செய்ததாகவும் அவர் கூறினார்.

மூன்றாம் அலை வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒவ்வொரு மாநிலம், மாநகரம் மற்றும் நகரமும் கொவிட்-19-க்கு எதிரான போரை மேற்கொள்ளும் வகையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்பிலான தொகுப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கொவிட்-19-க்கு எதிரான போரில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதே வெற்றியின் சூத்திரம் என்று கூறிய திரு அமித் ஷா, போதுமான அளவில் தடுப்பு மருந்துகள் விநியோகம் செய்யப்படுவதை இந்திய அரசு உறுதி செய்து வருவதாகவும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751501

*****************



(Release ID: 1751566) Visitor Counter : 234


Read this release in: English , Urdu , Telugu , Kannada