குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இடையூறுகள் மற்றும் செயல்படாத சட்டமன்றங்கள், மக்களின் வாழ்க்கையையும், நாட்டின் கனவுகளையும் சிதைக்கும்: குடியரசுத் துணைத் தலைவர் வேதனை

Posted On: 31 AUG 2021 6:29PM by PIB Chennai

சட்டமன்றங்களில் அதிகரித்து வரும் இடையூறுகள் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தரம் குறைந்து வருவதற்கு வருத்தம் தெரிவித்துள்ள குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு எம். வெங்கையா நாயுடு, 5000 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் ஆகியோரை, சட்டம் இயற்றும் அமைப்புகளில் தற்போது முதல் மாற்றத்தை ஏற்படுத்தத் தூண்டும் வகையிலான மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ‘மிஷன் 5000’ என்று இதனைக் குறிப்பிட்டுள்ள திரு நாயுடு, நாடாளுமன்ற ஜனநாயகம் மதிப்பை இழக்காமல் அதனைப் பாதுகாப்பதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜியின் முதலாவது நினைவு தினத்தை முன்னிட்டுஅரசியலமைப்பு: ஜனநாயகம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் பொறுப்பாளர்' என்ற கருப்பொருளில் பிரணாப் முகர்ஜி மரபு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பிரணாப் முகர்ஜி நினைவுக் கருத்தரங்கின் முதலாவது பதிப்பில் இடையூறுகளால் பாதிக்கப்படும் மற்றும் செயல்படாத சட்டமன்றங்களின் விளைவுகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

திரு பிரணாப் முகர்ஜியின் 50 ஆண்டுகால ஆக்கபூர்வமான பொது வாழ்க்கை பற்றியும், 21 ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக சேவையாற்றிய அவரது திறனையும் குறிப்பிட்டுப் பேசிய திரு நாயுடு, 'வளர்ந்து வரும் ஒவ்வொரு அரசியல்வாதியும் பொறாமைப்படும் வகையிலும் நாட்டின் பெருமைக்குரியவராகவும்' மறைந்த தலைவர் திகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்பை ஜனநாயகத்தில் அனைவரின் பங்கேற்பிற்கும் வழிவகை செய்யும் சமூக-பொருளாதார நோக்கங்களின் ஆழ்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்று கூறிய அவர், “ஜனநாயகத்தின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆளுகையில் வாய்ப்பளிக்க வேண்டியது அவசியம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின்படி மேம்பாட்டுத் திட்டங்களின் பலன்கள் அனைவருக்கும் செல்வதை உறுதி செய்யவேண்டும். அரசியலமைப்பைக் கடுமையாகப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே உண்மையான ஜனநாயகத்தையும், உள்ளடக்கிய வளர்ச்சியையும் உறுதி செய்ய முடியும்என்று  வலியுறுத்தினார்.

சபைகளின் கண்ணியம் மற்றும் மதிப்பிற்கு களங்கும் ஏற்படாத வகையில்  எதிர்ப்புகளைத் தெரிவிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். “இடையூறுகள் மிகுந்த மற்றும் செயல்படாத சட்டமன்றங்கள் மக்களின் வாழ்க்கையையும், நாட்டின் கனவுகளையும் சிதைக்கக் கூடும்என்று கூறிய திரு நாயுடு, தேர்ந்தெடுக்கப்படும் 5000 உறுப்பினர்களின் நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதேமிஷன் 5000’- இன் நோக்கம் என்று தெரிவித்தார்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான  திட்டங்கள் குறித்துப் பேசுகையில், வறுமை, படிப்பறிவின்மை, பாலினப் பாகுபாடு, ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்காக உள்ளடக்கிய வளர்ச்சி உத்திகளும், ஆட்சிமுறையும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று திரு வெங்கையா நாயுடு கூறினார். வேளாண் நடவடிக்கைகள் லாபகரமானதாகவும், அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்தும் விவசாயிகளுக்கு விடுதலை அளிக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தக் காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் இந்தியாவிற்கு உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் மாநில முன்னாள் ஆளுநர் திரு சேகர் தத், திரு பிரணாப் முகர்ஜியின் மகள் திருமிகு ஷர்மிஸ்தா முகர்ஜி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750810

-----



(Release ID: 1750936) Visitor Counter : 193


Read this release in: English , Urdu , Hindi , Punjabi