குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
காதியை தேசிய துணியாகக் கருதவேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள்
Posted On:
31 AUG 2021 1:01PM by PIB Chennai
காதியை தேசியத் துணியாகக் கருத வேண்டும் எனவும், அதன் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் ஏற்பாடு செய்த ‘காதி இந்தியா வினாடி வினா’ போட்டியை குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.
இந்த வினாடி வினா போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்த நிகழ்ச்சி நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணங்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஈடு இணையற்ற பங்களிப்பையும் நினைவுபடுத்துவதால், இந்தப் போட்டி நம்மை ஆரம்ப காலத்துக்கு சுவாரஸ்யமான முறையில் அழைத்து செல்கிறது என கூறினார்.
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடத்தப்பட்ட தண்டி யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், அந்த யாத்திரையில் கலந்து கொண்டவர்களுடன் கலந்துரையாடியது மிகவும் செறிவான ஓர் அனுபவம் எனக் கூறினார்.
இந்திய சுதந்திரப் பேராட்டம், வீரம், நெகிழ்ச்சி, தேசபக்தியுடன் கூடிய நீண்ட கதை எனக் கூறிய குடியரசுத் துணைத் தலைவர், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மக்களை மகாத்மா காந்தி எப்படித் திரட்டினார் என்பதையும் குறிப்பிட்டார்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாதங்கினி ஹஸ்ரா, பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் போன்ற ஆயிரக்கணக்கான வீரர்களின் உன்னத தியாகங்களை குடியரசுத் துணைத் தலைவர் நினைவு கூர்ந்தார்.
கடந்த ஏழு ஆண்டுகளில், காதித் துறையில் ஏற்பட்டுள்ள திருப்புமுனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு. வெங்கையா நாயுடு, இதன் வளர்ச்சிக்கு மத்திய அரசு, காதி கிராமத் தொழில் ஆணையம் மற்றும் இதர பங்குதார்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டினார்.
காதி கிராமத் தொழில் ஆணையம் நாடு முழுவதும் பரவி, நாட்டின் தொலைதூரப் பகுதியில் உள்ளவர்களுக்கும், நிலையான சுய வேலைவாயப்பை ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் திரு வெங்கையா நாயுடு கூறினார்.
சுதந்திரப் போராட்ட இயக்கத்தில், மக்களை இணைக்கும் சக்தியாக காதி இருந்தது என்பதை குடியரசுத் துணைத் தலைவர் நினைவு கூர்ந்தார்.
காதியின் சுற்றுச்சூழல் பயன்பாடு குறித்துக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர் காதி தயாரிப்பில், கார்பன் வெளியேற்றம் துளியும் இல்லை என கூறினார். இதன் தயாரிப்புக்கு மின்சாரமும், எரிபொருளும் தேவையில்லை என அவர் குறிப்பிட்டார். துணிக்கு நீடித்த, நிலையான மாற்றை, உலகம் பார்க்கும்போது, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற காதித் துணிகள் நினைவுக்கு வர வேண்டும் என அவர் கூறினார்.
சீருடைகளுக்கு காதியைப் பயன்பயன்படுத்துவது குறித்து கல்வி நிறுவனங்கள் ஆராய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு விடுத்தார்.
காதியை மிகப் பெரியளவில் முன்னேற்ற, பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் முன்வர வேண்டும் என திரு வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்தார். காதியை தேசியத் துணியாகக் கருதவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு நாராயண் ரானே, திரு பானு பிரதாப் சிங் வர்மா, காதி கிராமத் தொழில் ஆணையச் செயலாளர் திரு பிபி ஸ்வைன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750692
-----
(Release ID: 1750759)
Visitor Counter : 266