தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஏழைகளுக்கும் இந்திய அரசின் நலத் திட்டங்களுக்கும் இடையேயான இணைப்புப் பாலமாக சமுதாய வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன: மத்திய இணை அமைச்சர் திரு எல். முருகன்

Posted On: 29 AUG 2021 3:38PM by PIB Chennai

ஏழை மக்களுக்கும் இந்திய அரசின் நலத் திட்டங்களுக்கும் இடையேயான இணைப்புப் பாலமாக சமுதாய வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன. கொவிட்-19 தொற்று  காலகட்டத்தில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா முன்முயற்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய போது இந்தத் திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் சமுதாய வானொலி நிலையங்கள் முக்கிய பங்காற்றின.அதே போல ஏராளமான வானொலி நிலையங்கள் கொவிட்- 19 வழிகாட்டு நெறிமுறைகள், மன அழுத்த மேலாண்மை முதலியவை குறித்த விழிப்புணர்வையும் அதிக அளவில் ஏற்படுத்தின என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள இணையமைச்சர் திரு எல். முருகன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகா சென்றுள்ள அமைச்சர், சுட்டூர் மடத்தின் ஜகத்குரு டாக்டர் ஸ்ரீ சிவராத்திரி ராஜேந்திர மகாசுவாமி அவர்களின் 106-வது ஜெயந்தி விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு மைசூருவில் உள்ள ஜே எஸ் எஸ் கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜே எஸ் எஸ் சமுதாய வானொலி சேவையை இன்று காலை தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சமுதாய வானொலி நிலையங்களில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க உறுதிபூண்டுள்ளது”, என்று கூறிய அவர், இதுபோன்ற வானொலி நிலையங்களை அமைப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அளிக்கும் என்று உறுதி அளித்தார்.  சமூகம்பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம், நீர் மற்றும் துப்புரவு, பேரிடர் சார்ந்த விஷயங்களை எதிர்கொள்வதற்கு சமுதாய வானொலி பெரும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.

 

தற்போது நாடு முழுவதும் 329 சமுதாய வானொலி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றுள் 22 வானொலி நிலையங்கள் கர்நாடகாவில் இயங்குவதோடு மைசூரில் இன்று தொடங்கப்பட்டுள்ள ஜே எஸ் எஸ் சமுதாய வானொலி அந்த நகரத்தின் மூன்றாவது நிலையமாகும்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தின் ஐகானிக் வாரகொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மைசூரு அகில இந்திய வானொலி நிலையத்தில் கர்நாடக மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் மைசூரு கள அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து, வானொலி நிலைய பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள  நாதாலயா என்ற பிரபல இசைக் கலைஞர்களின் புகைப்பட அரங்கையும் அமைச்சர் திரு எல். முருகன் பார்வையிட்டார்

*************



(Release ID: 1750239) Visitor Counter : 153