குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு வருடமும் தங்களை பற்றிய தகவல் அட்டையை மக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 27 AUG 2021 5:55PM by PIB Chennai

 ‘பிரதிபலித்தல், நினைவு கூறுதல், மீண்டும் தொடர்பு கொள்ளுதல்எனும் புத்தகத்தின் முதல் பிரதியை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவிடம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவால் பதிப்பிக்கப்பட்டுள்ள இந்த புத்தகம், திரு வெங்கையா நாயுடு குடியரசு துணைத் தலைவர் பொறுப்பேற்ற நான்காவது ஆண்டை ஆவணப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட குடியரசு துணைத் தலைவர், மக்களுக்கான தகவல் அறிக்கையாக இது விளங்குவதாக தெரிவித்தார். அரசு பதவிகளை வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்த தகவல் அட்டையை ஒவ்வொரு வருடமும் மக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் சேவையாற்றும் மக்களுக்கு தெரிவிப்பது உங்களது கடமை,” என்று அவர் கூறினார்.

பெருந்தொற்றுக்கு இடையில் குறுகிய காலத்தில் இப்புத்தகத்தை தயாரித்ததற்காக வெளியீட்டு பிரிவுக்கு திரு நாயுடு பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அனுராக் தாகூர், குடியரசு துணைத் தலைவரின் லட்சியங்கள் மற்றும் சிந்தனைகளை இந்த புத்தகம் பிரதிபலிப்பதாக கூறினார். முக்கியமான தளமாக புதிய ஊடகம் உருவெடுத்திருப்பதாகவும், டிவிட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்களின் வாயிலாக மக்களுடன் குடியரசு துணைத் தலைவர் தொடர்ந்து உரையாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நான்காம் வருடத்தில் குடியரசு துணைத் தலைவரின் செயல்பாடுகளில் முக்கியமானவற்றை புகைப்படங்கள், தகவல் குறிப்புகள் மற்றும் வார்த்தைகளின் வாயிலாக ஐந்து பிரிவுகளில் இந்த 183-பக்க புத்தகம் விளக்குகிறது. பத்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் 133 நிகழ்ச்சிகளில் இந்த வருடத்தில் கலந்து கொண்ட குடியரசு துணைத் தலைவர், 53 உரைகளை வழங்கி, 23 புத்தகங்களை வெளியிட்டு, 22 துவக்க நிகழ்ச்சிகளுக்கும் தலைமை வகித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவரின் செயலாளர் டாக்டர் ஐ வி சுப்பா ராவ், தகவல் மற்றும் ஒலிபரப்பு செயலாளர் திரு அபூர்வ சந்திரா, கூடுதல் செயலாளர் மற்றும் சிவிஓ திருமிகு நீரஜ் சேகர், கூடுதல் செயலாளர் (பி&ஏ) திரு விக்ரம் சஹாய், வெளியீட்டு பிரிவின் தலைமை இயக்குநர் திருமிகு மோனிதீபா முகர்ஜி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749609

*****************


(Release ID: 1749655) Visitor Counter : 196