குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

உள்ளடக்கிய இணையவழி கல்விக்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்

Posted On: 26 AUG 2021 1:28PM by PIB Chennai

இணையவழி மற்றும் தொலைதூர கல்வியில் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்துள்ள குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, பெருந்தொற்றினால் அணுகல், தரம் மற்றும் மலிவு சார்ந்த விஷயங்கள் முக்கியத்துவம் பெற்று, இந்த நடைமுறையில் ஏராளமான மாணவர்கள் தவிர்க்கப்படுகிறார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.

தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான மின்னணு பாலமாக இணைய வழி கல்வியின் ஆற்றலைக் குறிப்பிட்ட அவர், சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகள் தவிர்க்கப்படாமல் இருப்பதையும், ‘மின்னணு பிரிவினை' உருவாகாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இணைய வசதி மற்றும் அணுகலை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக ஊரகப் பகுதிகளில் இவற்றை அதிகரிப்பதற்காக பாரத் நெட் போன்ற திட்டங்களை விரைந்து அமல்படுத்துவது அவசியம் என்று திரு நாயுடு கூறினார். சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்னணு சாதனங்களை தங்களது பெருநிறுவன சமூக பொறுப்பு நடவடிக்கைகள் கீழ் வழங்க   நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். “ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் சலுகையாக இணைய வழி கல்வி விளங்கக் கூடாது, மாறாக, இந்தியாவில் கல்வியின் உண்மையான ஜனநாயகமயமாக்கல் கருவியாக அது மாற வேண்டும்”, என்று அவர் தெரிவித்தார்.

இணையவழிக் கல்வி பாடங்கள் இந்திய மொழிகளில் இடம்பெறுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத் தலைவர், கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறையினர், பிராந்திய மொழிகளில் அதிக பாடங்களை வழங்க முன்வர வேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.

அனந்தபுரமுவில் உள்ள ஆந்திரப் பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் நிறுவன தின கொண்டாட்டங்களில் காணொலி வாயிலாக உரையாற்றிய திரு வெங்கையா நாயுடு, ஒரு பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உயர்கல்வி எவ்வாறு மிகப்பெரிய பொருளாதார உந்துசக்தியாக விளங்கக் கூடும் என்பதை எடுத்துரைத்தார்.

உயர்கல்வியின் நேர்மறை அம்சங்களை குறிப்பிட்டு பேசிய திரு நாயுடு, இந்திய பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்தில் உயர்த்துவதை நோக்கி பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை அடைவதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உள்ள பன்முகத்தன்மையை ஊக்குவித்து சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆக்கபூர்வமாக பணியாற்ற அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்திய பல்கலைக்கழகங்களுக்கு சர்வதேச கிளைகளைத் துவக்குவதன் மூலம் இந்திய கல்வியின் அடையாளம் மேம்படும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

தேசிய கல்வி கொள்கை 2020  குறித்துப் பேசிய அவர், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மனிதவியல் மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதன்படி பொறியியல் மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்துப் பிரிவினருக்கும்  செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா போன்ற நவீன தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார், ஆந்திரப் பிரதேச மாநில கல்வி அமைச்சர் டாக்டர் ஆடிமுலபு சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் திரு தலாரி ரங்கையா, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ் கோரி, ஐதராபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அப்பா ராவ் பொடைல், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749182

                                                                                           ------

 



(Release ID: 1749256) Visitor Counter : 267