பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில், பல்முனை கையெறி குண்டுகளின் முதல் தொகுப்பு இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பு

Posted On: 24 AUG 2021 3:25PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ வின் டெர்மினல் பாலிஸ்டிக் ரிசர்ச் லாபரட்டரீசின் தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் அடிப்படையில், எக்கனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பல்முனை கையெறி குண்டுகளின் முதல் தொகுப்பு, மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய ராணுவத்திடம் நாக்பூரில் இன்று (ஆகஸ்ட் 24, 2021) ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் தலைவர் திரு எஸ். என். நுவால், வெடிமருந்து விநியோகத்தில் தனியார்துறையின் பங்களிப்பைக் குறிக்கும் வகையில் பல்முனை கையெறி குண்டின் மாதிரியை அமைச்சரிடம் வழங்கினார். ராணுவத் தளபதி ஜெனரல் எம். எம். நரவானேபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டிஆர்டிஓ வின் தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி, காலாட் படை தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் .கே. சமந்த்ரா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அரசு மற்றும் தனியார் துறைகளிடையே அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் தன்னிறைவை நோக்கிய மிகப்பெரும் முன்முயற்சியாக இந்த பல்முனை கையெறி குண்டுகளின் ஒப்படைப்பு அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். “இந்தியப் பாதுகாப்புத் துறையில் இன்று ஓர் வரலாற்று சிறப்புமிக்க தினம். ராணுவ உற்பத்தியில் நமது தனியார் துறையின் பங்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. ராணுவ உற்பத்தித் துறையில் மட்டுமல்லாது பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் தற்சார்பு இந்தியாவை அடைவதிலும் இது முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது”, என்று அவர் தெரிவித்தார்.

ஆயுதப்படைகளின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாதுகாப்புத்துறையை தற்சார்புத் துறையாக மாற்றுவதற்காக அரசு மேற்கொண்டு வரும் ஏராளமான நடவடிக்கைகளை அமைச்சர் பட்டியலிட்டார். உத்தரப்பிரதேசத்திலும், தமிழ்நாட்டிலும் ராணுவத் தொழில்துறை வழித்தடங்கள், ராணுவ உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கை 2020-இன் வரைவறிக்கை தயாரிப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும். டிஆர்டிஓ வின், தொழில்துறைகளுக்கான தொழில்நுட்பப் பரிமாற்ற முன்முயற்சி பற்றியும் அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748523

 

----

 

 

 (Release ID: 1748626) Visitor Counter : 144