குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நாட்டுப்புற கலைகளை புதுப்பித்து, சமூக மாற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு அழைப்பு
Posted On:
23 AUG 2021 3:17PM by PIB Chennai
இந்திய நாட்டுப்புற கலைகளை புதுப்பித்து, அதன் ஆற்றலை, பாலின பாகுபாட்டை தடுப்பது மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாப்பது போன்ற சமூக பிரச்சினைகளை எடுத்துரைக்க பயன்படுத்த வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய நாட்டுப்புற கலைகளை கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்றில், குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசியதாவது:
பல நாட்டுப்புற கலைகளின் புகழ், படிப்படியாக அழிந்து கொண்டிருப்பது கவலையளிக்கிறது. ஒரு காலத்தில் நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டு வந்த குடும்பங்கள் மறைந்து வருகின்றன. இந்த குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நாட்டுப்புற கலையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும். அந்த இளைஞர்கள் நாட்டுப்புற கலைகள் மூலம் பிரச்சினைகளை எடுத்து கூறி சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
நமது நாட்டின் நாட்டுப்புற கலைகள் பற்றிய வளமான தரவுகளை உருவாக்க வேண்டும். ஒலி-ஒளி ஊடகத்தை பயன்படுத்தி அவற்றை விரிவாக ஆவணப்படுத்த வேண்டும். நவீன முறைக்கு மாறும்போது, நாட்டுப்புற கலைகளின் சாரம்சம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் நாட்டுப்புற கலையின் உயர்ந்த வரலாறு, வளமான பன்முகத்தன்மை மற்றும் வாய்வழியாக எடுத்துகூறும் மரபு ஆகியவற்றை பிரபலப்படுத்த வேண்டும். நமது மொழியின் நுணுக்கங்கள், நமது பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் நம் முன்னோர்களின் கூட்டு ஞானம் ஆகியவை இயற்கையாகவே நாட்டுப்புறக் கதைகளில் உள்ளன.
சுதந்திர போராட்ட காலத்தில், மக்களிடம் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் நாட்டுப்புற கலைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உண்மையிலேயே, நாட்டுப்புற கலைகள்தான் மக்கள் இலக்கியம்.
நமது நாட்டுப்புற கலைகளை, ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் புதுப்பித்து அவற்றை பிரபலப்படுத்த வேண்டும். தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவையும் நாட்டுப்புற கலைகளுக்கு தங்கள் நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு திரு. வெங்கையா நாயுடு கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748246
*****************
(Release ID: 1748272)
Visitor Counter : 635