அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தக்கூடிய ஜைகோவ்-டி தடுப்பூசி: அவசரகால பயன்பாட்டு அனுமதியை பெற்றது ஜைடஸ் காடிலா நிறுவனம்
Posted On:
20 AUG 2021 7:04PM by PIB Chennai
ஜைகோவ்-டி (ZyCoV-D) தடுப்பூசியை அவசரகாலத்துக்கு பயன்படுத்தும் அங்கீகாரத்தை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (DCGI) இருந்து ஜைடஸ் காடிலா நிறுவனம் இன்று பெற்றது. இது உலகின் முதல் மற்றும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட டிஎன்ஏ அடிப்படையிலான கொரோனா தடுப்பூசி.
இதை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பயன்படுத்த முடியும்.
இந்த மருந்தின் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை 28,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்டது. இதன் இடைக்கால அறிக்கையில், கொவிட் பாதிப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு, 66.6 சதவீத முதன்மை செயல்திறனை காட்டியுள்ளது.
கொரோனாவுக்கு, இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி பரிசோதனைகளில் இது மிகப் பெரிய பரிசோதனையாகும். இந்த தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாவது கட்ட பரிசோதனையில், ஏற்கனவே, வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, தாங்குதன்மை மற்றும் பாதுகாப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தடுப்பூசியின் 3 கட்ட பரிசோதனைகளை, தன்னிச்சையான தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் (DSMB) கண்காணித்துள்ளது.
இது குறித்து உயிரி தொழில்நுட்பத் துறை தலைவர் டாக்டர் ரேணு ஸ்வரூப் கூறியதாவது:
கொவிட் சுரக்ஷா திட்ட ஆதரவுடன், உயிரி தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து ஜைடஸ் நிறுவனம் உலகின் முதல் டிஎன்ஏ கொவிட் தடுப்பூசி ஜைகோவ்-டி-யை உருவாக்கி அதற்கு இன்று அவசரகால பயன்பாட்டு அனுமதி பெற்றது மிகவும் கவுரமான விஷயம். இந்திய தடுப்பூசி திட்டம், கொவிட் சுரக்ஷா, தற்சார்பு இந்தியா நிதியுதவி திட்டம் 3.0-ன் கீழ் தொடங்கப்பட்டு உயிரிதொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC) மூலம் அமல்படுத்தப்படுகிறது.
பாதுகாப்பான, திறன்வாய்ந்த கொவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இந்தியாவுக்கும், உலகுக்கும் இது முக்கியமான தடுப்பூசியாக இருக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உள்நாட்டில் தடுப்பூசி உருவாக்கும் திட்டத்திலும், உலகளாவிய புதிய தடுப்பூசி உருவாக்கும் திட்டத்திலும் இது முக்கிய சாதனை.
இவ்வாறு டாக்டர் ரேணு ஸ்வரூப் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747669
*****************
(Release ID: 1747706)
Visitor Counter : 588