நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கரும்பு விவசாயிகளின் நலனிற்காக உபரி சர்க்கரையின் ஏற்றுமதி மற்றும் எத்தனாலாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம்
Posted On:
19 AUG 2021 4:39PM by PIB Chennai
சர்க்கரையின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை உரிய காலத்தில் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவும், சர்க்கரையை எத்தனாலாக மாற்றவும், வேளாண் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் இந்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் உள்நாட்டு பயன்பாட்டை விட சர்க்கரையின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதிகமாக உள்ள சர்க்கரையை எத்தனாலாக மாற்றுவதற்கு மத்திய அரசு சர்க்கரை ஆலைகளுக்கு ஊக்கமளித்து வருகிறது. சர்க்கரையின் ஏற்றுமதிக்காக ஆலைகளுக்கு நிதி உதவியையும் வழங்கி வருகிறது. இதன் மூலம் கரும்பு விவசாயிகள் உரிய காலத்தில் கரும்புக்கான நிலுவைத் தொகையைப் பெற முடியும்.
உபரி சர்க்கரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, பெட்ரோலுடன் கலக்கும் எத்தனாலாக கரும்பை மாற்றுவதற்கு, அரசு, சர்க்கரை ஆலைகளை ஊக்குவிக்கிறது. இவ்வாறு பெட்ரோலுடன் எத்தனாலைக் கலப்பதால் பசுமை எரிவாயு உருவாவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான அந்நிய செலாவணி சேமிக்கப்படும். எத்தனாலின் விற்பனை மூலம் பெறப்படும் வருவாய், விவசாயிகளின் கரும்புக்கான தொகையை சர்க்கரை ஆலைகள் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
முந்தைய சர்க்கரை பருவமான 2019-20-இல், ரூ. 75,845 கோடி செலுத்த வேண்டிய நிலையில், ரூ. 75,703 கோடி செலுத்தப்பட்டு, மீதமுள்ள ரூ. 142 கோடி செலுத்தப்படாமல் உள்ளது. எனினும், தற்போதைய 2020-21 சர்க்கரை பருவத்தில் மிக அதிகபட்சமாக ரூ. 90,872 கோடி மதிப்பிலான கரும்புகளை சர்க்கரை ஆலைகள் பெற்றிருக்கின்றன. இதில் ரூ. 81,963 கோடி விவசாயிகளிடம் செலுத்தப்பட்டுள்ளது. 16.8.2021 வரை ரூ.8,909 கோடி செலுத்தப்பட வேண்டியுள்ளது. ஏற்றுமதியின் அதிகரிப்பு மற்றும் கரும்பை எத்தனாலாக மாற்றும் நடவடிக்கையால் கரும்புக்கான தொகையைச் செலுத்தும் பணி விரைவடைந்துள்ளது.
அதிகமாக உள்ள சர்க்கரையை எத்தனாலாக மாற்றுவது மற்றும் ஏற்றுமதி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நிலுவைத் தொகை கிடைப்பது மட்டுமல்லாமல், உள்நாட்டு சந்தையில் சர்க்கரையின் முந்தைய நிலையும் உறுதிப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை ஆலைகளின் வருவாய் மேன்மை அடைவதுடன் உபரி சர்க்கரையின் பிரச்சினையும் தீர்க்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747382
*****************
(Release ID: 1747447)
Visitor Counter : 252