வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிழக்கு மண்டல வேளாண் சந்தைப்படுத்துதல் நிறுவனத்தின் (NERAMAC) புதுப்பிப்பு மற்றும் பாமாயில் திட்டம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்: மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி

Posted On: 19 AUG 2021 3:59PM by PIB Chennai

வடகிழக்கு மண்டல வேளாண் சந்தைப்படுத்துதல் நிறுவனத்தை ரூ.77.45 கோடியில் புதுப்பிக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு நேற்று அனுமதி அளித்தது. இது குறித்து மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி கூறுகையில், ‘‘வடகிழக்கு மண்டல வேளாண் சந்தைப்படுத்துதல் நிறுவனம் புதுப்பிப்பு, விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்யும் மற்றும் சிறந்த பண்ணை வசதிகளை வழங்கும், வடகிழக்கு பகுதி விவசாயிகளுக்கு பயிற்சிகளை வழங்கும்’’ என்றார்.

அதேநாளில் சமையல் எண்ணெய்க்கான தேசிய திட்டம் - பாமாயிலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இந்த புதிய திட்டத்தில் வடகிழக்கு பகுதிகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

இது குறித்து மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில், ‘‘சமையல் எண்ணெய்க்கான தேசிய திட்டம் - பாமாயில் திட்டத்தை  அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக வட கிழக்கு பகுதி சிறப்பு கவன பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பாமாயில் இறக்குமதியை குறைப்பதையும், நமது விவசாயிகளுக்கு பயன் அளிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் இத்திட்டம்  நோக்கமாக கொண்டுள்ளது.’’  என்றார். 

பாமாயில்  திட்டம், கூடுதலாக 6.5 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் பாமாயில் சாகுபடி நிலங்களின் அளவு 10 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கும். 

‘‘சமையல் எண்ணெய்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா, 133.50 லட்சம் டன் சமையல் எண்ணெய்களை ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பில் இறக்குமதி செய்கிறது’’ என மத்திய அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

‘‘ பாமாயில் விளைவிப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்த வடகிழக்கு பகுதியை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், நாடு முழுவதும் ஒட்டு மொத்த இலக்கான 6.5 லட்சம் ஹெக்டேரில்,  50 சதவீதத்துக்கு மேல் வடகிழக்கு பகுதியில்  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கு முடிவுக்காக பிரதமருக்கு வடகிழக்கு மாநில விவசாயிகள் சார்பில் நான் நன்றி தெரிவிக்கிறேன்’’ என மத்திய அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747375

*****************



(Release ID: 1747417) Visitor Counter : 213