வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

உலகின் புதுமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக இந்தியாவை ஆக்குவதற்கான வல்லமை இந்திய ஸ்டார்ட் அப் சூழலியலுக்கு உண்டு: திரு பியூஷ் கோயல்

Posted On: 16 AUG 2021 7:11PM by PIB Chennai

தேசிய ஸ்டார்ட் அப் ஆலோசனைக் குழுவின் காணொலி கூட்டத்திற்கு மத்திய வர்த்தகம் & தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், நிதியியல், வழிகாட்டுதல், வரியியல் ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டு வரும் யோசனைகள் நமது புது நிறுவன சூழலியலை மேலும் வலுப்படுத்த உதவும் என்றார். நமது இளைஞர்களின் சக்தி, உற்சாகம் மற்றும் திறமை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக நமது புது நிறுவன சூழலியல் விளங்குவதாக கூறிய அமைச்சர், ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கம் மூலம் 'செய்யலாம்' என்ற மனநிலை 'செய்ய முடியும்' என்பதாக மாறி இருப்பதாக கூறினார்.

உலகின் புதுமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக இந்தியாவை ஆக்குவதற்கான வல்லமை இந்திய ஸ்டார்ட் அப் சூழலியலுக்கு உண்டு என்று திரு பியூஷ் கோயல் கூறினார். வளர்ந்து வரும் புது தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிப்பதற்காக தேசிய ஸ்டார்ட் அப் ஆலோசனைக் குழு பணியாற்றி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். 

புது நிறுவனங்களை அதிக போட்டித் திறன் மிக்கவையாக ஆக்கி ஸ்டார்ட் அப்புகளின் தலைநகரமாக இந்தியாவை மாற்ற தேசிய ஸ்டார்ட் அப் ஆலோசனைக் குழு இலக்கு நிர்ணயித்து உள்ளதாக திரு கோயல் தெரிவித்தார். விடுதலையின்  அம்ரித் மகோத்சவத்தை ஒட்டி, 75-வது சுதந்திர தினத்திற்குள் 75 புது நிறுவனங்கள் யூனிகார்ன்களாக மாற்ற தேசிய ஸ்டார்ட் அப் ஆலோசனைக் குழு வசதி அளிக்க வேண்டும்.

ஸ்டார்ட் அப் புரட்சியை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், புதிய கல்விக்கொள்கை 2020 மூலம் இளம் வயதிலேயே ஸ்டார்ட் அப் சிந்தனைகளை மாணவர்களின் மனங்களில் பள்ளிகள் விதைக்கும் என்றார். நாளைய வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும், புதுமைகளின் உந்து சக்தியாகவும், நான்காவது தொழில் புரட்சியின் தலைவர்களாகவும் இளைஞர்கள் உள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்தியா முழுவதும் குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் புது நிறுவனங்கள் உருவாக வேண்டும் என்று திரு கோயல் கூறினார். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் இணைப்புகள் வலுப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746455

*****************



(Release ID: 1746497) Visitor Counter : 275


Read this release in: English , Urdu , Hindi , Punjabi