குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் காதி கண்காட்சி: மத்திய அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா தொடங்கி வைத்தார்
Posted On:
16 AUG 2021 5:48PM by PIB Chennai
ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா, காதி கண்காட்சி மற்றும் விற்பனையகங்களை இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் உள்ள 75 ரயில் நிலையங்களில் காதி இந்தியாவின் விற்பனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் விற்பனையகத்தைப் பார்வையிட்ட அமைச்சர், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளைக் கவரும் வகையில், பல்வேறு வகையான காதி பொருட்களையும், அவற்றின் விலைப் பட்டியலையும் தெளிவாகக் காட்சிப்படுத்துமாறு காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த முன்முயற்சியைப் பாராட்டிய அவர், இதன் மூலம் காதி பொருட்களுக்கு புதிய நுகர்வோர் கிடைப்பார்கள் என்று கூறினார்.
காதி கைவினைஞர்கள் தங்களது பொருட்களை விற்பனை செய்வதற்கு மிகப்பெரிய சந்தை தளமாக இந்த விற்பனையகம் அமையும் என்றார் அவர். ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்துடன், புது தில்லி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காதி விற்பனை அரங்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி, இந்த அரங்கில் ரூ. 25,000 மதிப்பிலான காதி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746424
*****************
(Release ID: 1746460)
Visitor Counter : 275