பாதுகாப்பு அமைச்சகம்

‘விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின்’ ஒரு பகுதியாக நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

Posted On: 13 AUG 2021 4:08PM by PIB Chennai

 ‘விடுதலையின் அம்ரித் மகோத்சவம்என்று கொண்டாடப்படும் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் வகையில் பாதுகாப்பு படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்த பல்வேறு நிகழ்ச்சிகளை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2021 ஆகஸ்ட் 13 அன்று புதுதில்லியில் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் உரையாடிய திரு ராஜ்நாத் சிங், மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டக்கூடிய வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் ஏற்பாடு செய்ததற்காக அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு படைகளை திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். வேற்றுமையில் ஒற்றுமைஎனும் இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை கட்டிக்காப்பதற்காக தங்களது இன்னுயிர்களை தியாகம் செய்த அனைத்து அஞ்சா நெஞ்சர்களுக்கும் திரு ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். கார்கில் போரில் அரும்பெரும் தியாகத்தை செய்த கேப்டன் விக்ரம் பத்ராவை நினைவுக் கூர்ந்த அவர், வீரம் நிறைந்த நாயகர்களின் தீரம் மற்றும் அர்ப்பணிப்பு, இனிவரும் தலைமுறைகளுக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் என்றார்.

2021 மார்ச்சில் விடுதலையின் அம்ரித் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்ட ஐந்து தூண்கள் (விடுதலை போராட்டம், சிந்தனைகள்@75, சாதனைகள்@75, செயல்பாடுகள்@75 மற்றும் உறுதிமொழிகள்@75) குறித்து பேசிய பாதுகாப்பு அமைச்சர், வளர்ச்சிப் பாதையில் நாடு முன்னேறி செல்ல இந்த ஐந்து தூண்கள் வழிகாட்டுவதாகக் கூறினார்.

இந்தியாவை தற்சார்பாக்குவதற்கான அரசின் செயல்திட்டம் குறித்து குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் நாட்டை தற்சார்பாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். அரசின் நடவடிக்கைகள் காரணமாக இறக்குமதிகள் மீது சார்ந்திருப்பது கணிசமாக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் குறித்து பேசிய அமைச்சர், தனது முதல் பயணத்தை விக்ராந்த் தொடங்கியது ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது என்றார்.

சமீபத்தில் நிறைவுற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு சிங், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுபேதார் நீரஜ் சோப்ரா மற்றும் இதர வீரர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தில் மகாத்மா காந்தி மற்றும் நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் தலைமை குறித்து பேசினார். எந்த சவாலையும் எதிர்கொள்ள பாதுகாப்பு படைகள் தயாராக உள்ளதாகவும், படைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தி அவற்றின் செயல்திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745441

*****************



(Release ID: 1745557) Visitor Counter : 267