விவசாயத்துறை அமைச்சகம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேளாண் அமைச்சர்களின் ஆறாவது கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் திரு தோமர் உரையாற்றினர்
Posted On:
12 AUG 2021 6:24PM by PIB Chennai
புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது என்றும் கிராமப்புற இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தொழில்நுட்பங்களை ஆய்வகங்களிலிருந்து நிலத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேளாண் அமைச்சர்களின் ஆறாவது கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.
தஜிகஸ்தானில் உள்ள துஷான்பேவில் இருந்து காணொலி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், தீவிர கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட இந்திய வேளாண் துறை சிறப்பாக செயல்பட்டதாக கூறினார். உணவு உற்பத்தியுடன் ஏற்றுமதியும் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்து சர்வதேச உணவு பாதுகாப்புக்கு பங்களித்ததாக அவர் கூறினார்.
பசியை போக்கி, உணவு பாதுகாப்பை எட்டி, ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான நீடித்த வளர்ச்சி இலக்கை எட்ட அரசு உறுதிபூண்டுள்ளது என திரு தோமர் தெரிவித்தார். செறிவூட்டப்பட்ட வகைகள் ஊட்டச்சத்துகளில் சிறந்து விளங்குவதாகவும், நாட்டின் ஊட்டச்சத்து விஷயங்களை எதிர்கொள்ள இவற்றுக்கு ஊக்கமளிக்கப் படுவதாகவும் அவர் கூறினார்.
விவசாயத்துறையின் வெற்றியில் பல்வேறு மைல்கற்களை இந்தியா எட்டியுள்ளதாக வேளாண் அமைச்சர் மேலும் கூறினார். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப்புரட்சியோடு, பொது விநியோக திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான விலை ஆதரவு திட்டம் ஆகியவை உலகில் வேறு எங்கும் கிடையாது என்று அவர் கூறினார்.
கொள்கை வடிவமைப்பாளர்களின் லட்சியம், நமது வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளின் அயராத உழைப்பின் காரணமாக உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்ததோடு மட்டும் இல்லாமல் உபரியாகவும் உற்பத்தி செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பால், முட்டை மற்றும் மீன் உற்பத்தியில் இந்தியா இன்றைக்கு முன்னணியில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார். கூட்டத்தில் கலந்துகொண்ட திரு தோமர் தலைமையிலான குழுவில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் இணையமைச்சர் திருமிகு ஷோபா கரந்த்லாஜே மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745211
----
(Release ID: 1745286)
Visitor Counter : 221