பிரதமர் அலுவலகம்

இந்தியத் தொழில் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டம் 2021-ல் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 11 AUG 2021 6:38PM by PIB Chennai

நமஸ்காரம்

இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட்டுவரும் தொழில்துறை முன்னோடிகள் மற்றும் சிஐஐ உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது அமைச்சரவை சகாக்களே, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் திரு.டி.வி.நரேந்திரன், தொழில் நிறுவனங்களின் தலைவர்களே, வெளிநாட்டுத் தூதர்களே, பல்வேறு நாடுகளுக்கான இந்தியாவின் தூதர்களே, தாய்மார்களே, சகோதரர்களே

உலகளாவிய பெருந்தொற்று காலத்தில், இன்றைய கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.   இதுபோன்ற மிகவும் நெருக்கடியான காலகட்டத்திலும், இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையேயான ஒத்துழைப்பு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.   முகக் கவசங்கள், தனிநபர் முழு உடல் பாதுகாப்புக் கவசங்கள், வென்டிலேட்டர்கள் முதல் தடுப்பூசிகள் வரைஎந்தெந்த நேரத்தில், எத்தகைய தேவை ஏற்படுகிறதோ, அவற்றைப் பூர்த்தி செய்வதில் தொழில் நிறுவனங்கள், தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி வருகின்றனஇந்தியாவின் வளர்ச்சியில், தொழில்துறை மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த அனைத்து நண்பர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.   உங்களது முயற்சிகளால், இந்தியப் பொருளாதாரம் தற்போது வேகமடைந்து வருகிறது.   புதிய வாய்ப்புகள் குறித்து, தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளிடமிருந்து தகவல் வராத நாளே இல்லை என்ற அளவிற்கு உள்ளது.   தகவல் தொழில்நுட்பத் துறையில், சாதனை அளவாக தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நாட்டில் அதிகரித்துவரும் தேவைகளே இதற்குக் காரணம்.   இத்தகைய புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நமது குறிக்கோளை அடைய இனி, இருமடங்கு வேகத்தில் செல்ல வேண்டும்.  

நண்பர்களே,

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாப்படும் வேளையில், சி...-யின் இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   புதிய முடிவுகள் மற்றும் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள இந்தியத் தொழில் துறையினருக்கு இது பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.   சுயசார்பு இந்தியா இயக்கத்தை வெற்றியடையச் செய்யக்கூடிய மாபெரும் பொறுப்பு இந்தியத் தொழில் துறையைச் சார்ந்தது ஆகும்.   அரசு உங்களுக்கும், உங்களது முயற்சிகளுக்கும் எப்போதும் துணைநிற்கும் என்பதை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.   உங்களது திறமையின் மீது நம்பிக்கை வைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக தற்போது உருவாக்கப்பட்டுள்ள சூழலை இந்திய தொழில் நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.   அரசின் அணுகுமுறை அல்லது அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளில், கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.    புதிய உலகத்தோடு பீடுநடைபோடும் விதமாக, புதிய இந்தியா தயாராக உள்ளது.   முன்பு அன்னிய முதலீடுகளில் தயக்கம் காட்டிவந்த வேளையில்தற்போது அனைத்து விதமான முதலீடுகளையும் இந்தியா வரவேற்கிறது.    முன்பு, முதலீட்டாளர்களிடையே தயக்கத்தை ஏற்படுத்திவந்த  வரிக் கொள்கைகள், தற்போது முக அறிமுகமற்ற, உலகிலேயே மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பெருநிறுவன வரியாக மாற்றப்பட்டுள்ளது.  

தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நடவடிக்கைகள் மூலம், இந்தியாவின் அதிகாரவர்க்கம், சட்டங்கள் மற்றும் ஆவணங்களின் பிடியில் மக்களை சிக்க வைக்கும் என்ற நிலையை மாற்றியுள்ளது.  பல்லாண்டு காலமாக, தொழிலாளர்களையும், தொழிற்சாலைகளையும் சிக்கலில் தள்ளியிருந்த சட்டங்கள் ஒழிக்கப்பட்டு, தற்போது 4 தொழிலாளர் சட்டங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.   வேளாண் தொழில், முன்பு வாழ்வாதாரத்திற்கான ஒரு அம்சமாக மட்டுமே கருதப்பட்டு வந்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க வேளாண் சீர்திருத்தங்கள் வாயிலாக, தற்போது நாட்டின் விவசாயிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளனர்.   இதன் காரணமாக, இந்தியாவிற்கு, இதுவரை இல்லாத அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு வரப்பெற்றுள்ளது.   நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பும் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளது

நண்பர்களே

முன்பு, எதுவாக இருந்தாலும்அது வெளிநாட்டைச் சேர்ந்ததாக இருந்தால் தான் சிறப்பானது என்ற மனநிலை மக்களிடம் இருந்ததுஇதன் விளைவு என்ன என்பதை, தொழில் துறை முன்னோடிகளான நீங்கள் அறிவீர்கள்? பல ஆண்டு கால கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட நமது சொந்த தயாரிப்புகளையேவெளிநாட்டுப் பெயர்களில் தான் ஊக்குவிக்க வேண்டியிருந்தது.   ஆனால், தற்போது அந்த நிலைமை வேகமாக மாறிவருகிறது.   தற்போது, இந்தியத் தயாரிப்புகள் மீது மக்களின் நாட்டம் அதிகரித்துள்ளதுதொழிற்சாலை இந்திய நிறுவனமா என்பது முக்கியமல்ல, ஆனால், தற்போது ஒவ்வொரு இந்தியரும், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களையே விரும்புகின்றனர்.  

இந்திய மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வது தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு அம்சம்.    இந்த நம்பிக்கையை நாம் அனைத்துத் துறைகளிலும் காண முடிகிறதுசமீபத்திய ஒலிம்பிக் போட்டியின்போது, நீங்கள் இதனை உணர்ந்திருப்பீர்கள்எந்தத் துறையாக இருந்தாலும், அதில் சாதித்துக் காட்ட இந்திய இளைஞர்கள் தயங்குவதில்லை.   கடினமாக உழைத்துஅபாயங்களை எதிர்கொண்டு, வெற்றியை நிலைநாட்டுவதையே அவர்கள் விரும்புகின்றனர்அதே நம்பிக்கை தான் புதிதாக தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களிடமும் காணப்படுகிறது.   வர்த்தகத்தில், அபாயங்களை எதிர்கொண்டு, திறமையின் மீது மட்டும் நம்பிக்கை வைத்திருப்பவர்களால் தான் தொடர்ந்து வளர்ச்சியடைய முடியும்.   தற்போதைய பெருந்தொற்று காலத்தில், புதிய தொழில்கள் அதிகளவில் தொடங்கப்பட்டு வருகிறது.  

நண்பர்களே,

தொழில்நுட்பங்கள் மீது நாட்டில் காணப்படும் உற்சாகம், விரைவான சீர்திருத்தங்களைக் கொண்டுவர அரசை ஊக்குவிக்கிறது.   நாம் அறிமுகப்படுத்தியுள்ள சீர்திருத்தங்கள் எளிதாக மேற்கொள்ளப்பட்ட முடிவுகளோ, சாதாரண மாற்றங்களோ அல்ல.   பல்லாண்டு காலமாக, இதுபோன்ற சீர்திருத்தங்கள் தேவை என்ற கோரிக்கை இருந்துவந்தது.   ஆனால், அதனைக் குறைத்து மதிப்பிட்டு வந்தனர்.   ஏராளமான விவாதங்கள் நடத்தப்பட்ட போதிலும், முடிவுகள் எடுக்கப்படாமல் இருந்ததுடன், மாற்றங்களைக் கொண்டு வருவது கடினம் என்ற நிலையும் இருந்தது.   ஆனால், அதே மாற்றங்களை, நாங்கள் முழு உறுதியுடன் மேற்கொண்டதை நீங்கள் அறிவீர்கள்.   நிலக்கரிச் சுரங்கங்கள் வணிக ரீதியாக ஏலத்தில் விடப்பட்டுள்ளது.   தனியார் துறையினரின் பங்களிப்பு வெளிப்படையாக ஊக்குவிக்கப்படுகிறது.   பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைகளில் தனியார் பங்குபெற ஏதுவாக, சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.  

நண்பர்களே,

உள்நாட்டுத் தொழிற்சாலைகள் மீது நாடு கொண்டிருந்த நம்பிக்கை காரணமாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குவதும், வாழ்க்கையை எளிதாக்குவதும் மேம்பட்டுள்ளது.   கம்பெனிகள் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களே, இதற்கு சிறந்த உதாரணம்.   பல்வேறு அம்சங்கள், குற்றத்தன்மையற்றவையாக மாற்றப்பட்டுள்ளன.   அதேபோன்று, குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுமாநில அளவிலான சீர்திருத்தங்கள் மீதும் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறதுஇந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்துடன், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டமும் முழுமையாக செயல்படுத்தப்படுவதன் வாயிலாக, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.   முதலீட்டுக் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக சீர்திருத்த மசோதா, சிறு முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்.   

நண்பர்களே,

நாட்டு நலனுக்காக எத்தகைய பேரபாயங்களையும் எதிர்கொள்ளக்கூடிய அரசு தான் தற்போது நாட்டை நிர்வகித்து வருகிறது.   அரசியல் விளைவுகளை எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் முந்தைய அரசுகளுக்கு இல்லாததால், ஜிஎஸ்டி அமலாக்கம், பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.   ஆனால், நாங்கள் ஜிஎஸ்டி-யை அமல்படுத்தியதோடு மட்டுமின்றி, ஜிஎஸ்டி வரி வசூலும் சாதனை அளவாக உள்ளது

நண்பர்களே,

ஒரே ஒரு சக்கரம் மட்டும் உள்ள கார் ஓடாது என்று நமது முன்னோர்கள் கூறிவந்தனர்அனைத்து சக்கரங்களும் முறையாக இயங்க வேண்டும்எனவேதொழிற்சாலைகளும், அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய மனநிலையை அதிகரிக்க வேண்டும்.   சுயசார்பு இந்தியாவை அடைய, புதிய மற்றும் சிரமமான வழிகளை நாம் கண்டறிய வேண்டும்.   தொழில் நிறுவனங்கள், தங்களது முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நாட்டில் அதிகமாக உள்ளது.  

புதிய  தேசியக் கல்விக்கொள்கை வாயிலாக, நாடு பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளதுபள்ளிக்கூடங்கள் முதல், திறன், ஆராய்ச்சி வரை புதிய சூழலை உருவாக்க வகை செய்துள்ளது.     இதில், தொழில் நிறுவனங்களும் முக்கியப் பங்காற்ற வேண்டும்.     சுயசார்பு இந்தியாவை அடைய, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான எங்களது முதலீட்டை அதிகரிக்க உள்ளோம்.   இதனை அரசால் மட்டும் செய்துவிட முடியாது.   தொழில் நிறுவனங்களும் இதில் அதிகளவில் பங்குபெற வேண்டும்.   இந்தியத் தயாரிப்பு என்ற முத்திரையை  வலுப்படுத்துவதே நமது இலட்சியம்.   நாட்டிற்கு வளம் சேர்த்து மரியாதையை ஏற்படுத்துவதே நமது நோக்கம்.   இந்த இலட்சியத்தை அடைய, நம்மிடையேயான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது அவசியம்.   உங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும்உங்களது ஆலோசனைகளை ஏற்கவும் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.   சுதந்திர தின பவளவிழா கொண்டாடப்படும் வேளையில், நீங்கள் அனைவரும் பல்வேறு தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்வதோடு, புதிய ஆற்றலுடன், புதிய உறுதிப்பாடுகளை ஏற்க முன்வர வேண்டும்!   உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! நன்றி.

                                                       *******

 

 



(Release ID: 1745152) Visitor Counter : 235