கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

இந்திய துறைமுகங்கள் சட்டமசோதா வரைவு 2021

Posted On: 09 AUG 2021 2:55PM by PIB Chennai

இந்திய துறைமுகங்கள் சட்டமசோதா 2020 வரைவு முன்னதாக கடந்த 2.07.2020 அன்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், மாநில கடல்சார் வாரியங்கள் மற்றும் பெருந் துறைமுகங்கள் உள்ளிட்ட தொடர்புடையவர்களின் கருத்துக்கேட்புக்காக வெளியிடப்பட்டது. மத்திய அரசு துறைகள், மத்திய துறைகளுக்குள்ளான குழுக் கலந்தாய்வு போன்றவற்றுக்காக இரண்டாவது முறையாக இது கடந்த 10.12.2020 அன்று வெளியிடப்பட்டு, பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக துறைமுகங்கள், கப்பல்கள் மற்றும் நீர்வழித் துறை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.

பொதுமக்கள், துறைசார்ந்தவர்கள் மற்றும் மத்திய அரசு துறைகளில் இருப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கூறியவற்றைச் சேர்த்து, இந்திய துறைமுகங்கள் சட்டமசோதா 2021 வரைவு கடந்த ஜூன் 10, 2021 அன்று வெளியிடப்பட்டது. 24 ஆம் தேதி நடைபெற்ற கடல்சார் மாநிலங்கள் மேம்பாட்டுக் கழகத்தின் 18 ஆவது கூட்டத்துக்கு முன்னதாக துறை சாரந்தவர்களின் கருத்துக்களைப் பெற இது வெளியிடப்பட்டது.

இந்த சட்ட மசோதா தொடர்பாக ஒரு சில மாநிலங்களின் கருத்துக்கள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இச்சட்ட மசோதா தற்போது ஆலோசனை கட்டத்திலேயே உள்ளது.

இந்திய துறைமுகங்கள் சட்டமசோதா 2021 வரைவு, பெரிய துறைமுகங்களின் நிர்வாகம் மற்றும் மேலாண்மையை, பெரும் துறைமுகங்கள் அதிகாரச் சட்டம் 2021-இன் படி (Major Ports Authorities Act, 202), பெரும் துறைமுக வாரியத்திடம் வழங்க திட்டமிட்டுள்ளது. அதேபோல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறிய துறைமுகங்களின் நிர்வாகம் மற்றும் மேலாண்மையை அந்தந்த மாநிலங்களின் மாநில கடல்சார் வாரியங்களிடம் வழங்க இச்சட்ட மசோதா முன்மொழிகிறது.

அரசு-தனியார் பங்களிப்புடன் துறைமுகங்கள் மேம்பாடு

புதிய பெரிய துறைமுகங்களை ஏற்படுத்தவும், அவற்றின் மேலாண்மை அதிகாரமும் மத்திய அரசிடம் உள்ளது. சிறிய துறைமுகங்கள் ஏற்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது ஆகியவை அந்தந்த மாநிலங்களிடம் உள்ளது. பெரும் துறைமுகங்கள் அதிகாரச் சட்டம் 2021-இன்படி, குறிப்பிட்ட பெரும் துறைமுகத்தின் வாரியத்துக்கு, உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த, புதிய சட்டங்களை ஏற்படுத்தவும், மாற்றங்கள் கொண்டுவரவும் அதிகாரம் உள்ளது. தற்போது சில பெரும் துறைமுகங்கள் புதிய முனையங்கள் போன்றவற்றை அரசு-தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்தி வருகின்றன.  இதுபோன்ற திட்டங்களுக்கு ஏலம் மூலம் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது.

இந்த தகவல்களை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நிர்வழித் துறை அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744034

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744031

*****************


(Release ID: 1744182) Visitor Counter : 484


Read this release in: Bengali , English , Urdu , Punjabi