குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஹாக்கி போன்ற பாரம்பரிய இந்திய விளையாட்டுகளின் பெருமையை மீட்டெடுக்க குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 07 AUG 2021 12:58PM by PIB Chennai

ஹாக்கி போன்ற பாரம்பரிய இந்திய விளையாட்டுகளின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்று இன்று வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, இதற்குத் தேவையான ஊக்கத்தை வழங்க மாநில அரசுகள் மற்றும் பெருநிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

சமூக சேவகர் மற்றும் தேசியவாதியான திரு சமன் லால் நினைவு தபால் தலையை குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் வெளியிட்டு பேசிய திரு நாயுடு, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் சமீபத்திய செயல்பாடு விளையாட்டின் மீதான ஆர்வத்தை கிளர்ந்தெழ செய்துள்ளதாகவும், ஹாக்கி மற்றும் கபடி போன்ற இந்திய விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார். உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சியை அடித்தட்டு அளவில் வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், இந்திய விளையாட்டுகளுக்கு மத்திய அரசு அளித்து வரும் ஊக்கத்தை பாராட்டினார்.

அடுத்தவர்களை அப்படியே பின்பற்றும் காலனிய மனநிலையை தவிர்க்குமாறு வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும் என்றார். இந்தியர்கள் அனைத்து துறைகளிலும் திறமை பெற்றிருப்பதாக கூறிய அவர், “அவர்களுக்கு தேவையானது சரியான ஊக்கம் மற்றும் ஆதரவு மட்டுமே,” என்றார்.

திரு சமன் லாலுக்கு புகழாரம் சூட்டிய திரு நாயுடு, நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தனது முழு வாழ்வையும் அவர் அர்ப்பணித்ததாக கூறினார். திரு சமன்லால் மிகப்பெரிய தேசியவாதியாகவும், சிந்தனைவாதியாகவும் திகழ்ந்ததாகவும், சேவை, விழுமியங்கள் மற்றும் படைப்புத்திறன் ஆகியவை அவரது வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், தகவல் தொடர்பு இணை அமைச்சர் திரு தேவுசின்ஹ் சௌஹான், திறன் வளர்த்தல் மற்றும் தொழில்முனைதல் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் ஹர்ஷ் வர்தன், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தே மற்றும் செயலாளர் (தபால்) திரு வினீத் பாண்டே ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743509

*****************



(Release ID: 1743644) Visitor Counter : 206