குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அரசின் ஆதரவு

Posted On: 05 AUG 2021 1:40PM by PIB Chennai

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு நாராயண் ரானே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக இன்று அளித்த பதிலில் தெரிவித்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில், தொழில்முனைவோர் தாங்களாகவே முதலீடு செய்கின்றனர். இந்த நிறுவனங்களை அமைச்சகம் உருவாக்காது. நிறுவனங்களின் ஊக்குவித்தல் மற்றும் வளர்ச்சிப் பணியை மாநிலங்கள் மேற்கொள்ளும். ஊக்குவித்தல், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்முயற்சிகளுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், ஊரக வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், முத்ரா திட்டம், காதி கிராமம் மற்றும் நார் தொழில்துறைகளுக்கான திட்டம், சர்வதேச ஒத்துழைப்புத் திட்டம், கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆதரவு திட்டம் முதலிய மத்திய அரசின் திட்டங்களை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உத்யோக் ஆதார் தளத்தின் தகவலின்படி (அக்டோபர் 2015 முதல் ஜூன் 2020 வரை) அகில இந்திய அளவில் 102,32,468 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் புதிய பதிவு தளமான உதயம் பதிவுமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 01.07.2020 முதல் 31.07.2021 வரை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள 41,37,443 நிறுவனங்கள் அகில இந்திய அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட இந்த துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் மீது பெருந்தொற்றின் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்கு தேசிய சிறு தொழில்கள் கழகம் மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஆய்வுகளை மேற்கொண்டன. இதன் முடிவுகளின்படி 91% நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவது தெரிய வந்தது. பணப்புழக்கம் (55% நிறுவனங்கள்), புதிய வர்த்தகம் (17% நிறுவனங்கள்), தொழிலாளர் (9% நிறுவனங்கள்), தளவாடங்கள் (12% நிறுவனங்கள்) மற்றும் கச்சாப்பொருளின் இருப்பு (8% நிறுவனங்கள்) ஆகியவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்ட 5 முக்கிய சவால்களாகும்.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளுக்கு ஏராளமான நிவாரணங்களை அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ஆதரவளிப்பதற்காக, குறிப்பாக கொவிட்- 19 பெருந்தொற்று சூழலில் பல்வேறு முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்த நிறுவனங்களுக்கு ரூ. 20,000 கோடி துணைக் கடனாக வழங்கப்படுகிறது. வர்த்தகங்களுக்கு இணை இலவச கடனாக ரூ. 3 லட்சம் கோடி அளிக்கப்படுகிறது. எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காகஉதயம் முன்பதிவின்மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் புதிய முன்பதிவு மேற்கொள்ளப்படுகிறது. ரூ. 200 கோடி வரை கொள்முதல் செய்வதற்கு சர்வதேச ஒப்பந்தம் தேவையில்லை.

அவசரகால கடன் உத்தரவாதத் திட்டம்:

கொவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட வர்த்தகங்களுக்கு உதவும் நோக்கத்தில் தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. நான்கு பிரிவுகளாக வழங்கப்பட்ட அவசரகால கடன் உதவி திட்டங்கள் மூலம் 02.07.2021 வரை ரூ.2.73 லட்சம் கோடி கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ.2.14 லட்சம் கோடி கடன்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 1.14 கோடி கடனாளிகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 3 லட்சம் கோடியாக இருந்த இந்தத் திட்டத்தின் அதிகபட்ச வரம்பு, ரூ. 4.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742682

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742683

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742684

 

-------


(Release ID: 1742835) Visitor Counter : 353