உள்துறை அமைச்சகம்
இயற்கை சீற்றங்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்பட்ட நிதிகள்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பதில்
Posted On:
04 AUG 2021 4:39PM by PIB Chennai
இயற்கை சீற்றங்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு நித்யானந்த ராய் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
2016-17ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரை வெள்ளம், புயல், வறட்சி போன்றவற்றுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி, மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட நிதி விவரங்கள் கீழ்கண்ட இணைப்பில் அட்டவணையாக வழங்கப்பட்டுள்ளன.
யாஸ் புயல் பாதிப்பு:
யாஸ் புயல் ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களை பாதித்தது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற தகுதி பெற்றுள்ளனர்.
யாஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் அளிக்கப்பட்டது. புயல் பாதிப்புக்குப்பின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதியுதவியாக ஒடிசாவுக்கு ரூ.500 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.300 கோடி, ஜார்கண்ட்டுக்கு ரூ.200 கோடி வழங்கப்பட்டது. அதோடு, 2021-22ம் நிதியாண்டுக்கான மாநில பேரிடர் நிதியில், மத்திய அரசின் பங்காக, புயல் பாதிப்பு மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும், சேர்த்து முன்கூட்டியே ரூ.8873.60 கோடி கடந்த ஏப்ரல் 29ம் தேதி வழங்கப்பட்டது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இயற்கை பேரிடர் பாதிப்பை குறைப்பதற்கான திட்டம்:
இயற்கை சீற்றங்களின் பாதிப்பை குறைக்க அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில், பேரிடர் மேலாண்மை செயல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுனாமி அச்சறுத்தலை எதிர்கொள்ள முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் தகவல் தொடர்பு அமைப்பு உள்ளது. இதில் 31 ஜிபிஎஸ் சென்சார்கள் மற்றும் ஆக்சிலரோ மீட்டர்கள், எஸ்எம்எஸ் எச்சரிக்கையை பரப்பும் கருவிகள் உள்ளன. மாநில அவசரநிலை செயல்பாட்டு மையத்தில் பல வசதிகள் உள்ளன. இது தவிர 13 தானியங்கி வானிலை மையங்களும் உள்ளன.
மின்னணு சிறை திட்டத்தின் நிலவரம்:
நாட்டில் உள்ள சிறைகளின் செயல்பாட்டை கம்ப்யூட்டர் மயமாக்கும் நோக்கத்தில் மின்னணு-சிறைகள் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டில் உள்ளது. மின்னணு சிறைகள் குறித்த தரவுகள் காவல்துறை மற்றும் நீதிமன்றங்களுடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. இத்திட்டத்துக்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.99.49 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. தேசிய சிறைகள் தகவல் இணையதளத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பராமரிக்கும் தரவுகளை மின்னணு சிறைகள் பயன்படுத்துகின்றன. இந்த முறையை தேசிய தகவல் மையம் மூலம் சட்ட அமலாக்கத்துறை அங்கீகாரம் பெற்ற அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742309
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742311
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742312
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742313
----
(Release ID: 1742496)