புவி அறிவியல் அமைச்சகம்
ஆழ்கடல் ஆய்வுத் திட்டம், ரூ. 4077 கோடி மதிப்பில் 5 ஆண்டு காலத்திற்கு மேற்கொள்ளப்படும் : மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
03 AUG 2021 1:30PM by PIB Chennai
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தை ரூ. 4077 கோடி மதிப்பில் 5 ஆண்டு காலத்திற்கு அமல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளின் இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று அவர் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: ஆழ்கடல் ஆய்வு என்பது, பல்வேறு அமைச்சகங்கள், பல துறைகள் சார்ந்த திட்டம். ஆழ்கடல் சுரங்கத்திற்கான தொழில்நுட்பங்கள், ஆழ்கடல் கனிம வளங்கள் மற்றும் கடல்சார் உயிரினங்களை ஆராய்வது, ஆழ்கடல் ஆய்வுக்காக ஓர் ஆராய்ச்சிக் கப்பலை கையகப்படுத்துவது, ஆழ்கடல் கண்காணிப்புகள் மற்றும் கடல்சார் உயிரியல் திறன் கட்டமைப்பு ஆகியவற்றுடன், 6000 மீட்டர் ஆழத்திற்கு ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலின் வளர்ச்சி அடங்கிய ஆழ்கடல் தொழில்நுட்பத்தின் மேம்பாட்டில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது. இந்த இயக்கத்தின் அனைத்து அம்சங்களும் 2021-இல் தொடங்கும்.
வேளாண்- தானியங்கி வானிலை நிலையங்கள்:
நாட்டு மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு துல்லியமான வானிலை முன்னறிவிப்பை வழங்குவதற்காக வேளாண்- தானியங்கி வானிலை நிலையங்களை அமைப்பதற்கான பணியை இந்திய வானிலை ஆய்வுத் துறை மேற்கொண்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் வேளாண் அறிவியல் மையங்களில் உள்ள மாவட்ட வேளாண் வானிலைப் பிரிவுகளில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிராம வேளாண் வானிலை சேவையின் கீழ் இயங்கும் வட்டார அளவிலான வேளாண் வானிலை ஆலோசனை சேவைகளை அதிகரிப்பதற்காக, 200 மாவட்ட வேளாண் வானிலைப் பிரிவுகளில் வேளாண்- தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்திய வானிலை ஆய்வுத் துறை மேற்கொண்டு வரும் இந்தத் திட்டம், வானிலை அடிப்படையிலான பயிர்கள் மற்றும் கால்நடை மேலாண்மை உத்திகளால் நாட்டின் விவசாயிகள் பயனடைவதற்கான ஒரு நடவடிக்கையாகும். இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்ட மற்றும் வட்டார அளவில் வானிலை முன்னறிவிப்புகள் விவசாயிகளுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அளிக்கப்படும்.
வேளாண் சம்பந்தமான அன்றாட முடிவுகளை விவசாயிகள் எடுப்பதற்கு இந்த வேளாண் வானிலை ஆலோசனைகள் உதவிகரமாக உள்ளன. தற்போது 43.37 மில்லியன் விவசாயிகள், இந்த ஆலோசனைகளை குறுஞ்செய்தி வாயிலாக நேரடியாகப் பெற்று பயனடைகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741807
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741806
*****
(Release ID: 1741807)
(Release ID: 1741806)
(Release ID: 1741889)
Visitor Counter : 265