குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் திரு நாராயண் ரானே தகவல்
Posted On:
29 JUL 2021 3:10PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு நாராயண் ரானே எழுத்துப்பூர்வமாக இன்று அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளுக்கு ஏராளமான நிவாரணங்களை அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ஆதரவளிப்பதற்காக, குறிப்பாக கொவிட்- 19 பெருந்தொற்று சூழலில் பல்வேறு முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்த நிறுவனங்களுக்கு ரூ. 20,000 கோடி துணைக் கடனாக வழங்கப்படுகிறது. வர்த்தகங்களுக்கு இணை இலவச கடனாக ரூ. 3 லட்சம் கோடி அளிக்கப்படுகிறது. எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக ‘உதயம் முன்பதிவின்' மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் புதிய முன்பதிவு மேற்கொள்ளப்படுகிறது. ரூ. 200 கோடி வரை கொள்முதல் செய்வதற்கு சர்வதேச ஒப்பந்தம் தேவையில்லை.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரம்பரிய தொழில் துறைகளை புதுப்பிப்பதற்கான நிதித் திட்டம், புதிய கண்டுபிடிப்புகள், ஊரகத் தொழில் துறை மற்றும் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்தத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
வேளாண்மை/ ஊரக தொழில்கள்:
புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்களுக்கு, வேளாண்மை மற்றும் ஊரகத் தொழில்களில் வேலை வாய்ப்பு வழங்குவதை ஊக்குவிப்பதற்காக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் வாயிலாக அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி 17.15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 214495 பிரிவுகளை அமைப்பதற்காக பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 6209.62 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பிரிவுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தொழில்நுட்பம், நிதி மற்றும் சந்தை நிபுணர்களின் வாயிலாக ஆதரவு அளிக்கப்படுகிறது. சிறப்பாக செயல்படும் பிரிவுகளைத் தரம் உயர்த்துவதற்காக 15 முதல் 20% வரையிலான மானியத்துடன் ரூ. 1.0 கோடி வரை இரண்டாம் நிலை கடன் வழங்கப்படுகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் இதர காதி மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்களை இணையதளம் வாயிலாக சந்தைப் படுத்துவதற்காக மின்னணு வர்த்தகத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் ஊரகத் தொழில்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
கொவிட் தொற்றால் புதிய மற்றும் சிறிய நிறுவனங்கள் முடக்கம்:
கொவிட்-19 பெருந்தொற்றால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால், பிற துறைகளைப் போல குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையும் பாதிப்பை சந்தித்தது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட இந்த துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் மீது பெருந்தொற்றின் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்கு தேசிய சிறு தொழில்கள் கழகம் மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஆய்வுகளை மேற்கொண்டன. இதன் முடிவுகளின்படி 91% நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவது தெரிய வந்தது. பணப்புழக்கம் (55% நிறுவனங்கள்), புதிய வர்த்தகம் (17% நிறுவனங்கள்), தொழிலாளர் (9% நிறுவனங்கள்), தளவாடங்கள் (12% நிறுவனங்கள்) மற்றும் கச்சாப்பொருளின் இருப்பு (8% நிறுவனங்கள்) ஆகியவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்ட 5 முக்கிய சவால்களாகும். கடந்த ஆண்டு பிரதமர் துவக்கி வைத்த ‘சாம்பியன்ஸ்’ என்ற இணையதளத்தின் வாயிலாக 25.7.2021 வரை 35,983 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவிலான சந்தை:
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் அதை தவிர்த்த பகுதிகளிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக 52 ஏற்றுமதி பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சர்வதேச கண்காட்சிகள், வாங்குவோர்- விற்போர் கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் இந்த நிறுவனங்கள் பங்கு பெறுவதற்காகவும், உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை சென்றடையவும் சர்வதேச ஒத்துழைப்புத் திட்டத்தை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. மேலும் சர்வதேச சந்தையை இந்த நிறுவனங்கள் விரிவுபடுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப மேம்பாடு, திறன் வளர்ச்சி, தர சான்றிதழ் உள்ளிட்ட உதவிகளையும் அமைச்சகம் வழங்கி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740289
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740285
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740283
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740279
*****************
(Release ID: 1740428)
Visitor Counter : 1617