சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படும் பகுதிகள்: மத்திய அமைச்சர் திரு நிதின் கட்காரி தகவல்

Posted On: 29 JUL 2021 2:18PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்காரி நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று வெளியிட்ட தகவல்கள் பின்வருமாறு:

தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் 5 சாலை விபத்துகள் (உயிரிழப்புகள்/ படு காயங்கள் அடங்கியவை) அல்லது 10 உயிரிழப்புகள் (கடந்த மூன்று ஆண்டுகளிலும் சேர்த்து) ஏற்பட்ட 500 மீட்டர் தொலைவு, சாலை விபத்து கரும்புள்ளி என்று அழைக்கப்படுகிறது”. சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து கரும்புள்ளி தடங்கள் குறித்தத் தரவுகளை சேகரித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட முகமைகளுக்கு  அனுப்பி வைத்துள்ளது.

2015-2018 ஆம் ஆண்டுகளில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேசிய நெடுஞ்சாலைகளில் 5803 கரும்புள்ளி தடங்களை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இவற்றின் 5167 இடங்களில் தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், 2923 தடங்கள் நிரந்தரமாக சரி செய்யப்பட்டுள்ளன.

கரும்புள்ளி தடங்களில் குறுகிய கால நடவடிக்கையாக அறிவிப்புப் பலகைகள், குறியீடுகள், தடுப்புகள் முதலியவை உடனடியாக அமைக்கப்படுகின்றன. நீண்டகால நடவடிக்கையாக தேவையான இடங்களில் மேம்பாலங்கள், நடைப்பாலங்கள், இணை சாலைகள் போன்றவை அமைக்கப்படுகின்றன.

நாட்டின் நெடுஞ்சாலைகளில் கடந்த 2018-ஆம் ஆண்டு 140843 சாலை விபத்துகளும், 2019-ஆம் ஆண்டு 137191 விபத்துகளும், 2020-ஆம் ஆண்டு 116496 சாலை விபத்துகளும் நிகழ்ந்துள்ளன.

தமிழகத்தில் 748 கரும்புள்ளி தடங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் 19583 (2018), 17633 (2019) மற்றும் 15269 (2020-முதற்கட்ட தரவு) சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. புதுச்சேரியில் 771 (2018), 653 (2019) மற்றும் 567 (2020- முதற்கட்ட தரவு) சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.

சாலை கட்டமைப்பில் நெகிழி கழிவுகளின் பயன்பாடு:

தேசிய நெடுஞ்சாலைகளில் இதுவரை 703 கிலோமீட்டர் தொலைவிற்கு நெகிழி கழிவுகளால் சாலை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள ஊரகப் பகுதிகளில் 50 கிலோமீட்டருக்கு இணை சாலைகளில் அவ்வப்போது நடைபெறும் புதுப்பித்தல் பணிகளின்போது நெகிழி கழிவுகளின் பயன்பாட்டை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது. நெகிழி கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை  இந்த நடைமுறை தடுக்கும்.

வாகனக் கழிவுக் கொள்கை:

பழைய மற்றும் மாசை ஏற்படுத்தும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் வாகனக் கழிவுக் கொள்கை அமைந்துள்ளது. வாகனம் மற்றும் அது சார்ந்த துறைகளில் அதிக வளர்ச்சிக்கு இந்தக் கொள்கை வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஃகு தொழில்துறையில் அரிய உலோகங்களின் பயன்பாட்டையும் இது உறுதி செய்யும். வாகன கழிவு சூழலியல் வளர்ச்சி அடைந்ததும் அதிக வேலை வாய்ப்பையும், வாகன துறையில் அதிக வளர்ச்சியையும் இந்தக் கொள்கை ஏற்படுத்தக்கூடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740263

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740262

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740261

*****************

 



(Release ID: 1740349) Visitor Counter : 262


Read this release in: English , Urdu , Bengali , Punjabi