பாதுகாப்பு அமைச்சகம்
தஜிகிஸ்தான் நாட்டின் துஷான்பேயில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் பேச்சு
பயங்கரவாதம் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்
Posted On:
28 JUL 2021 5:47PM by PIB Chennai
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் தஜிகிஸ்தான் நாட்டின் துஷான்பே நகரில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், “சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பயங்கரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது” என்றார். எந்த விதமான பயங்கரவாத நடவடிக்கைகள் அல்லது அது போன்றவற்றுக்கு துணை போகும் நடவடிக்கைகள், எல்லை தாண்டிய பயங்கரவாதம், யாரால், எவ்வித காரணங்களில், எந்தக் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் அது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றம் என அவர் குறிப்பிட்டார். எத்தகைய வடிவத்திலும் இருக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளை இந்தியா எதிர்த்து போரிடும் என்பதை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் மீண்டும் ஒரு முறை உறுதிப்படத் தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன், பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளில் அமைப்பு நாடுகளுடன் நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும், உறுப்பு நாடுகளுடன் சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில் உறவை பலப்படுத்துவதிலும் இந்தியா அதிக முக்கியத்துவம் செலுத்தி வருவதாக திரு.ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதே உணர்வுடன் தான் இந்தியா பல ஆண்டுகளாக வன்முறை மற்றும் பேரழிவைச் சந்தித்து வரும் ஆப்கான் மக்களுக்கு உதவி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஆப்கானிஸ்தானில் இதுவரை இந்தியா 500-க்கும் மேற்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதாகவும், மேலும் சில திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், ஒட்டுமொத்தமாக 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியா, ஐரோப்பிய-ஆசிய நாடுகளுக்கு இடையே முக்கியமான சக்தியாக விளங்குவதையும், இந்தோ-பசிபிக் பகுதியில் முக்கிய நாடாக விளங்குவதையும் குறிப்பிட்ட அவர், இந்தப் பகுதிகளில் வளர்ச்சி மற்றும் வளம் செழிக்க இந்தியா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
இந்தியா, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்தாண்டு இறுதிக்குள் 250 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், குறைந்தபட்சம் 90 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும், நட்பு நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவவும் உறுதிபூண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக வளர்ச்சியடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர், இன்று நடைபெறும் இந்நிகழ்ச்சி இப்பகுதியில் நிலைத்தன்மையையும், பாதுகாப்பையும் பலப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739978
------
(Release ID: 1740093)
Visitor Counter : 330