எரிசக்தி அமைச்சகம்

மின்சாரக் கட்டணங்களை எளிதில் கணக்கிட்டு டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்காக 7 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ஒப்புதல்

Posted On: 27 JUL 2021 3:16PM by PIB Chennai

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

மின்சாரக் கட்டணங்களை எளிதில் கணக்கிட்டு டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்காகவும், தங்களது மின்சாரப் பயன்பாடு குறித்து நுகர்வோர் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், மின்சாரச் சிக்கனத்தைக் கடைபிடிக்கும் விதமாகவும், முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் வாய்ப்பை வழங்குவதற்காகவும், மின்சார விநியோக நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவும் ஸ்மார்ட் மீட்டர்களை (திறன்மிகு கணக்கீட்டுக் கருவிகள்) பொருத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தேசிய திறன்மிகு தொகுப்பு இயக்கத்தின் கீழ், 7.23 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசிக்தி ஆதாரங்களை ஒருங்கிணைப்பதில் ஸ்மார்ட் மீட்டர்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

புதுப்பிக்கத்தக்க எரிசிகதி ஆதாரங்களில் இருந்து 2022-ம் ஆண்டுக்குள் 1,75,000 மெகாவாட் மின் திறனை நிறுவ இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் சூரிய மின்சக்தி 1,00,000 மெகாவாட், காற்று மின்சக்தி 60,000 மெகாவாட், பயோமாஸ் 10,000 மெகாவாட் மற்றும் சிறிய புனல் மின்சாரத் திட்டங்கள் 5000 மெகாவாட் அடங்கும்.

2021 ஜூன் 30 வரை நிறுப்பட்டுள்ள மற்றும் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மொத்த திறன் 96.95 ஜிகாவாட் ஆகும். புனல் மின்சாரம் இதில் சேர்க்கப்படவில்லை.

2021 ஜூன் 30 வரை, மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களில் இருந்து நிறுவப்பட்டுள்ள மொத்த மின்சார உற்பத்தி திறன் 150.06 ஜிகாவாட் ஆகும். நிறுவப்பட்டுள்ள மொத்த திறனில் இது 39 சதவீதம் ஆகும். எனவே, 2030-க்குள் 40 சதவீதம் எனும் இலக்கை இந்தியா தாண்டிவிடும்.

மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவிப்பதற்காக, மாநிலங்களுக்கிடையேயான விநியோகத்திற்கானக் கட்டணங்கள் தள்ளுபடி, பசுமை எரிசக்தி வழித்தடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் ஊக்குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739443

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739444

                                                                      -----



(Release ID: 1739590) Visitor Counter : 236


Read this release in: English , Punjabi , Bengali , Urdu