குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண்பதற்காக பல்கலைக்கழகங்கள் நிபுணர்களாக செயல்பட வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 21 JUL 2021 12:21PM by PIB Chennai

பருவநிலை மாற்றம் வறுமை மற்றும் மாசு போன்ற சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண்பதற்காக பல்கலைக்கழகங்கள் நிபுணர்களாக செயல்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கேட்டுக்கொண்டுள்ளார். பல்வேறு சமூகப் பொருளாதார விஷயங்கள் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்கள் குறித்து பல்கலைக்கழகங்கள் விவாதிக்க வேண்டும் என்றும், அரசுகளின் தேவைகள் மற்றும் வசதிக்கேற்ப அமல்படுத்துவதற்கான யோசனைகளையும் முன்வைக்குமாறு அவர் கூறினார்.

சோனிபட்டில் உள்ள .பி ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலகப் பல்கலைக்கழகங்கள் உச்சிமாநாட்டில் காணொலி வாயிலாக துவக்க உரை நிகழ்த்திய குடியரசு துணைத் தலைவர், சிறந்த பண்புகள், திறன், குண நலன்களுடைய தலை சிறந்த கல்வியாளர்கள், பொருளியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளைப் பல்கலைக்கழகங்கள் தயார்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

எதிர்காலத்தின் பல்கலைக்கழகங்கள்: நிறுவனம் சார்ந்த நெகிழ்திறனை கட்டமைத்தல், சமூக பொறுப்பு மற்றும் சமுதாயத் தாக்கம்”, என்ற உச்சி மாநாட்டின் கருப்பொருளைக் குறிப்பிட்டுப் பேசிய திரு நாயுடு, பலதரப்பு அணுகுமுறைகளை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், நம்மைச் சுற்றியுள்ள சவால்களை எதிர் கொள்வதற்காக நிலையான மற்றும் அளவிடக்கூடிய தீர்வுகளை ஒருங்கிணைந்த கல்வியின் வாயிலாக உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மரபுசார் வகுப்பறை கல்விக்கு நிகராக காணொலி கல்வி அமையாது என்று குறிப்பிட்ட திரு வெங்கையா நாயுடு, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வகுப்பறை மற்றும் இணையதள கல்வியின் தலை சிறந்த அம்சங்கள் கலந்த கற்பிக்கும் மாதிரியை உருவாக்குமாறு கோரிக்கை விடுத்தார். இவ்வாறு உருவாக்கப்படும் மாதிரி, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி சிறந்த கற்றலை உறுதி செய்யும் வகையில் அமைய வேண்டும் என்றார் அவர்.

கற்றல் என்பது வெறும் பாடங்களைக் கொண்டு சேர்ப்பது மட்டுமல்ல; மாணவர்கள் தாங்களாகவே புதிய படைப்பாற்றலுடன் கற்பதற்கு அவர்களை தயார்படுத்தவும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கற்பித்தல் மற்றும் கற்றல் அமைப்புமுறையில் மேலும் நேர்மையை புகுத்துவதற்கு உதவிகரமாக, கல்வித் துறையில் புதுமையான கண்டுபிடிப்புகள் விரைவில் ஏற்படுவதற்கு கொவிட்-19 பெருந்தொற்று வித்திட்டுள்ளதாக திரு நாயுடு குறிப்பிட்டார். எனினும் இணையதளம் வாயிலான கல்வி சூழலை தொடர்ந்து தரம் உயர்த்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். கல்வித் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்த குடியரசு துணைத் தலைவர், இதன் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட முறையில் கல்வி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இது தவிர, இளைஞர்களிடையே திறன் மற்றும் வேலை வாய்ப்பை மேம்படுத்துவதற்காக திறன் பயிற்சி மற்றும் முதியோர் கல்வியிலும் இணையதள கல்வியின் சாதனங்களைப் பயன்படுத்துமாறும் அவர் யோசனை தெரிவித்தார்.

வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்கும் மற்றும் மின்னணு சாதனங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் குழந்தைகளிடையே மயோபியா ஏற்படும் அபாயம் குறித்து நிபுணர்கள் எச்சரித்து உள்ளதை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத் தலைவர், மாணவர்கள் வகுப்பறையில் பாதி நேரத்தையும் மீதமுள்ள நேரத்தை மைதானங்கள் அல்லது இயற்கையுடனும் செலவிட வேண்டும் என்று கூறினார்.

கொவிட்-19 தடுப்பூசிகள் மற்றும் அது சம்பந்தமான துறைகளின் ஆராய்ச்சியில் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பைப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு மனித சமூகம் கடமைப் பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

எந்த ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக செழிப்பை உறுதி செய்வதில் கல்வி அடித்தளமாக விளங்குவதாக திரு நாயுடு கூறினார். மனிதாபிமான செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் தொழில்துறையினர், கல்வித்துறையில் இணைந்து அதன் வசதிகளை மேம்படுத்த உதவுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் பேராசிரியர் (டாக்டர்) டி பி சிங் உள்ளிட்டோர் இந்தக் காணொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737458

                                                                                                      -----



(Release ID: 1737484) Visitor Counter : 218