அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டணியை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மிக முக்கிய பங்காற்றுகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 20 JUL 2021 4:04PM by PIB Chennai

மாநிலங்களவையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

வாழ்வதற்கு சிறந்த அறிவியல் பூர்வமான இடமாக உலகை மேம்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளில் பல்வேறு அறிவியல் சார்ந்த அமைச்சகங்களும் துறைகளும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றன. எரிசக்தி, நீர், மருத்துவம் மற்றும் விண்வெளி உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டணியை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.

தூய்மையான எரிசக்தி மற்றும் நீர் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப இயக்கத் திட்டங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அடங்கிய வெளிநாடுகளில் வசிக்கும் விஞ்ஞானிகள், கல்வியாளர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து முக்கியத் துறைகளில் உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சூரிய ஒளி சக்தி, தரமான எரிசக்தியைக் கட்டமைத்தல், உயரிய மற்றும் மேம்பட்ட இணைப்பு மற்றும் தண்ணீர் ஆராய்ச்சி உள்ளிட்டத் துறைகளில் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. விமான உயிரி எரிவாயுவில் உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டணியை அமைப்பதற்காக அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) வாயிலாக தொழில்நுட்ப மையமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. சிஎஸ்ஐஆர் அமைப்பு, அமெரிக்காவின் பசிபிக் இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் டைமெதைல் வினையூக்கியின் விநியோகத்திற்கு ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் அது சம்பந்தமான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவின் சுற்றுச்சூழல் சுகாதார அறிவியலுக்கான தேசிய நிறுவனத்துடன் சிஎஸ்ஐஆர் அமைப்பு மற்றும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சியின் மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பிற்கு ஆதரவளிப்பதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் மேலுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளின் விண்வெளி சார்ந்த நவீன வசதிகளைக் கட்டமைக்கும் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நாட்டில் அதிகரிப்பதற்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் கொள்கை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தொழில்துறை மற்றும் புதிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து அடிப்படை ஆராய்ச்சி, பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளில் கவனம் செலுத்தி, கொவிட்-19 சம்பந்தமான சவால்களை எதிர் கொள்வதற்காக வலுவான தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா, பிரேசில், டென்மார்க், எகிப்து, இஸ்ரேல், ஜப்பான், போர்ச்சுகல், கொரியா, நார்வே, ரஷ்யா, செர்பியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தீர்வுகளை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேம்பட்ட மருத்துவச் சோதனைகளுக்கான கூட்டணி என்ற முன்முயற்சியின் கீழ், அண்டை நாடுகளில் மருத்துவச் சோதனையை வலுப்படுத்துவதற்காக உயிரி தொழில்நுட்பத் துறை, வெளியுறவு அமைச்சகத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி முனையமாக பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் படி இந்நாள்வரை கோவாக்ஸ் திட்டத்தின் வாயிலாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சுமார் 19.86 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற நடவடிக்கைகளால் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள், மருத்துவ பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சி, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு யோகாவை அடிப்படையாகக் கொண்ட திட்டம் போன்ற தனித்துவம் வாய்ந்த முயற்சிகளால் இந்தியா பிற நாடுகளிலிருந்து தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வேறுபட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737194

                                                                                      -----


(Release ID: 1737319) Visitor Counter : 306